கோலாலம்பூர் – கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து இந்தோனிசியாவின் பண்டோங் சென்ற ஏர் ஆசியா விமானத்தில், விமானப் பணியாளர்களில் ஒருவர் பணியில் இருக்கும் போது திடீர் மரணமடைந்தார்.
இதனால், ஏகே416 என்ற அவ்விமானம் உடனடியாக ஜோகூர் செனாய் அனைத்துலக விமான நிலையத்திற்குத் திருப்பப்பட்டு தரையிறக்கப்பட்டது.
செனாய் விமான நிலையத்தில் உடனடியாக மருத்துவச் சிகிச்சைகள் ஏற்பாடு செய்யப்பட்டு, அப்பணியாளர் மரணமடைந்துவிட்டதாக ஏர் ஆசியா அறிவித்திருக்கிறது.
இதனிடையே, மீண்டும் செனாய் விமான நிலையத்தில் இருந்து 9 மணியளவில் பண்டோங் புறப்பட்ட அவ்விமானம் ஹுசைன் சாஸ்டிராநெகாரா அனைத்துலக விமான நிலையத்தில் காலை 10.11 மணியளவில் தரையிறங்கியது.
இது போன்ற சூழ்நிலைகள் வந்தாலும் கூட, பயணிகளின் பாதுகாப்பு தமக்கு மிக முக்கியம் என்று குறிப்பிட்டிருக்கும் ஏர் ஆசியா தொடர்ந்து சிறந்த சேவையை வழங்குவோம் என்று உறுதியளித்திருக்கிறது.
மேலும், பணியில் இறந்து போன பணியாளரின் குடும்பத்தினருக்கு தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்திருப்பதோடு, அவர்களின் குடும்பத்தினருக்குத் தேவையான உதவியையும் செய்வதாகத் தெரிவித்திருக்கிறது.
இறந்தவர் 46 வயதான இந்தோனிசியர் என்பது குறிப்பிடத்தக்கது.