கோலாலம்பூர் – பண்டான் தொகுதியின் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ரபிசி ரம்லியின் கடும் உழைப்பைத் தற்காப்பதற்காகவே, 14-வது பொதுத்தேர்தலில், அவரது தொகுதியில் தான் போட்டியிடுவதாக பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் கூறியிருக்கிறார்.
“பண்டானைப் பற்றி நினைக்கும் போது, நான் கவலையடைகின்றேன். காரணம், ரபிசியால் அங்கு போட்டியிடமுடியவில்லை. அவர் ஒரு திறமை வாய்ந்த இளைஞர். ரபிசியை நான் தற்காக்க விரும்புகிறேன்” என்று வான் அசிசா தெரிவித்திருக்கிறார்.
மேலும், ரபிசியின் தியாகங்களையும், கடும் உழைப்பையும் தற்காக்கவே அத்தொகுதில் தான் போட்டியிடுவதாக வான் அசிசா தெரிவித்திருக்கிறார்.
என்எஃப்சி (National Feedlot Corporation) ஊழல் தொடர்பான இரகசிய வங்கி ஆவணங்களை வெளியிட்ட குற்றத்திற்காக பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் ரபிசி ரம்லிக்கு அமர்வு நீதிமன்றம் 30 மாத சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.
அரசியல் சாசனத்தின் படி, ஓராண்டுக்கு மேலாக சிறைத் தண்டனை பெறுபவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்பதால், 14-வது பொதுத்தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை ரபிசி இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.