கோலாலம்பூர் – கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் 1எம்டிபி தலைவரும் தலைமை செயல் அதிகாரியுமான அருள் கந்தாவுக்கு எதிராக காவல் துறையில் புகார் ஒன்றை செய்துள்ளார்.
1எம்டிபி நிறுவனத்தின் நிதி நிலைமைகள் குறித்து பொய்யான அறிக்கைகள் வழங்கியதற்காக அருள் கந்தா மீது இந்த புகார் செய்யப்பட்டது.
குற்றவியல் சட்டங்களின் கீழ் வேண்டுமென்றே தகவல்களை மறைப்பது மற்றும் பொய்யான தகவல்களைத் தருவது ஆகிய குற்றங்களை அருள் கந்தா இழைத்திருக்கிறார் என லிம் புகார் செய்திருக்கின்றார்.
1எம்டிபி திவால் நிலைமையில் இல்லை என்றும் மேற்கொள்ளப்பட்டுவரும் சீரமைப்புத் திட்டத்தின் கீழ் 1எம்டிபி தனது கடன்களை செலுத்த முடியும் என்றும் அருள் கந்தா தொடர்ந்து வலியுறுத்தி வந்தார் என்றும் லிம் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
ஆனால், அண்மையில் 1எம்டிபி நிறுவனத்தைச் சேர்ந்த 2 இயக்குநர்கள் அந்நிறுவனம் திவால் நிலையில் இருக்கிறது என்றும் தனது கடன்களைச் செலுத்த முடியாத நிலையில் இருக்கிறது என்றும் ஒப்புக் கொண்டுள்ளனர் என்றும் லிம் லிப் எங் சுட்டிக் காட்டியுள்ளார்.