கோலாலம்பூர் – நடப்பு பேங்க் நெகாரா ஆளுநர் முகமட் இப்ராகிம் இன்று புதன்கிழமை தனது பதவியிலிருந்து விலகுவார் என எதிர்பார்க்கப்படும் வேளையில் அவருக்குப் பதிலாக முன்னாள் பேங்க் நெகாரா துணை ஆளுநர் நோர் ஷம்சியா முகமட் யூனுஸ் அந்தப் பதவிக்கு நியமிக்கப்படலாம் என ஆரூடங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
தற்போது முகமட் இப்ராகிம் பதவி விலகுவதற்கான நடைமுறைகள் விவாதிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் அடுத்த ஆளுநர் யார் என்பது இன்னும் உறுதிப்படுத்தபடவில்லை என்றும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த நவம்பர் 2016 வரை பேங்க் நெகாராவின் துணை ஆளுநராகப் பொறுப்பு வகித்த நோர் ஷம்சியா தனது பதவிக் காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து பதவி விலகினார்.
பதவி விலகிய மற்றொரு துணை ஆளுநரான சுக்டேவ் சிங்கும் இந்தப் பதவிக்கான பரிசீலனையில் இருக்கிறார் என்றும் மற்றொரு தகவல் தெரிவித்தது.
பேங்க் நெகாராவில் 31 ஆண்டுகாலம் பணியாற்றிய பின்னர் சுக்டேவ் 2017-இல் பதவி விலகினார்.
டான்ஸ்ரீ டாக்டர் செத்தி அக்தார் அசிசுக்குப் பதிலாக கடந்த 1 மே 2016-ஆம் நாள் பேங்க் நெகாராவின் 8-வது ஆளுநராக முகமட் இப்ராகிம் நியமிக்கப்பட்டார்.