Home நாடு மாமன்னர் பதவி விலகினார் – மலேசியாவில் வரலாற்றுத் திருப்பம்

மாமன்னர் பதவி விலகினார் – மலேசியாவில் வரலாற்றுத் திருப்பம்

1272
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மலேசிய அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத திருப்பமாக, ஆட்சியில் இருக்கும் மாமன்னர் தனது பதவியிலிருந்து விலகிக் கொள்ளும் சம்பவம் நாட்டின் முதன் முறையாக இன்று அரங்கேறியுள்ளது.

கிளந்தானின் சுல்தான் மாஹ்முட் தனது 15-வது மாமன்னர் என்ற பதவியிலிருந்து விலகியுள்ளார் என மாமன்னரின் அரண்மனை இன்று அதிகாரபூர்வமாக அறிவித்தது. அவரது பதவி விலகல் இன்று முதல் அமுலுக்கு வருகின்றது.

அவரது பதவி விலகல் குறித்து பல்வேறு ஆரூடங்கள் கூறப்பட்டாலும், அவரது விலகலுக்கான காரணங்கள் அதிகாரபூர்வமாக இதுவரை அறிவிக்கப்படவில்லை.

#TamilSchoolmychoice

மலேசியாவில் மாமன்னர் ஆட்சி முறை சுதந்திரத்திற்குப் பின்னர் 1957 முதல் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து இதுவரையிலும், சில மாமன்னர்கள் முழுமையான 5 ஆண்டுகால பதவிக் காலத்தை நிறைவு செய்திருக்கிறார்கள். ஒருசிலர் பதவிக் காலத்தின்போது எதிர்பாராதவிதமாக மரணமடைந்ததன் காரணமாக, அவர்களுக்குப் பதிலாக துணை மாமன்னராக இருந்தவர்கள் அந்தப் பதவியை ஏற்றுக் கொள்ளும் சூழ்நிலைகள் இருந்திருக்கின்றன.

ஆனால், எந்த மாமன்னரும் தனது பதவிக் காலத்தின்போது விலகிக் கொள்ளும் நிலைமை மலேசியாவில் இதுவரை ஏற்பட்டதில்லை. இதுவே முதல் முறை!

இதைத் தொடர்ந்து தற்போது துணை மாமன்னராக இருக்கும் பேராக் சுல்தான் ராஜா நஸ்ரின் ஷா மீண்டும் மாமன்னராகத் தனது பொறுப்புகளை ஏற்றுக் கொண்டு மாமன்னராகத் தற்காலிகமாகத் தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மலாய் ஆட்சியாளர்கள் மன்றம் மீண்டும் கூடிய விரைவில் கூடி, புதிய மாமன்னரைத் தேர்ந்தெடுப்பதா அல்லது எஞ்சிய பதவிக் காலத்திற்கு பேராக் சுல்தானே மாமன்னராகத் தொடர்வதா என்ற முடிவை எடுக்கும்.

மாமன்னர் பதவி விலகுவதற்கான சட்டரீதியான வழிமுறைகளை வழங்கும் மலேசிய அரசியல் சாசன அமைப்பிற்கேற்ப சுல்தான் மாஹ்முட் பதவி விலகியுள்ளார். கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 13-ஆம் தேதி அவர் மாமன்னராகப்  பதவியேற்றார்.

பின்னர் 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் 24-ஆம் தேதி சுல்தான் மாஹ்முட் அதிகாரபூர்வமாக மாமன்னராக முடிசூட்டப்பட்டார்.

தன்னை மாமன்னராகத் தேர்ந்தெடுத்த சக சுல்தான்களுக்கும் இன்றைய தனது பதவி விலகல் கடிதத்தின்வழி சுல்தான் மாஹ்முட் நன்றி தெரிவித்துக் கொண்டார் என அரண்மனையின் காப்பாளர் டத்தோ வான் அகமட் அகமட் டஹ்லான் அப்துல் அசிஸ் தெரிவித்திருக்கிறார்.