கோலாலம்பூர்: “ஹாட்ஸ்பாட்” எனப்படும் முக்கிய இடங்களுக்கு, ஊழல் தடுப்பு ஆணையம் தனது அதிகாரிகளையும், ஊழியர்களையும் கேமரன் மலை இடைத் தேர்தலின் போது பணியில் அமர்த்தும். வாக்குகளை வாங்கும் நடவடிக்கைகளை தடுப்பதற்காக இந்தச் செயல்முறை எடுக்கப்படுவதாக தேர்தல் ஆணையத் தலைவர் அசார் அசிசான் ஹருண் கூறினார்.
தேர்தலின் போது அவ்வாறான பிரச்சார நடவடிக்கைகள் ஏற்பட்டு, சட்டத்திற்கு எதிராக தவறுகள் இழைத்திருந்தால், 1954-ஆம் ஆண்டு தேர்தல் சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்டோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்தார்.
இது தொடர்பாக, ஊழல் தடுப்பு ஆணையத் தலைவர், டத்தோஶ்ரீ முகமட் சுக்ரி அப்துல், தேசியக் காவல் துறைத் தலைவர் டான்ஶ்ரீ முகமட் புசி ஹருண், மற்றும் புக்கிட் அமான் மேலாண்மை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அனைத்துக் கட்சிகளும் வாக்குப்பதிவு நாளில், கட்சி அலுவலகத்தை திறக்கவோ, பராமரிக்கவோ, அனுமதிக்கப்படாது என அவர் நினைவூட்டினார்.
மேலும், வேட்பாளர்கள் அல்லது அரசியல் கட்சிகள், விருந்துகள், பரிசு மற்றும் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி, அரசாங்க வசதிகள் மற்றும் சொத்துகளை பயன்படுத்துவது, தேர்தல் விதிகளை மீறக்கூடிய இனவாத பிரச்சாரம் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.