இந்து மதத்தை இழிவுபடுத்தியக் காரணத்திற்காக 34 வயது முகமட் சாம்ரி வினோத் நேற்று ஞாயிற்றுக்கிழமை பெர்லிஸ் மாநிலத்தில் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
அவர் மீது சுமார் 867 புகார்கள் காவல் துறையில் செய்யப்பட்டதாக காவல் துறைத் தலைவர் முகமட் புசி ஹருண் கூறினார். அதன் அடிப்படையில், இன்று திங்கட்கிழமை அவர் டாங் வாங்கி காவல் நிலையத்திற்கு மேல் விசாரணைக்கு கொண்டு வரப்பட்டு நான்கு நாட்களுக்கு காவலில் வைக்கப்பட்டுள்ளார் என காவல் துறை உறுதி செய்தது.
மக்களிடையே முரண்பாடு மற்றும் இன விரோதத்தை தூண்டுதல் சட்டம் 298ஏ மற்றும் பல்லூடக தொடர்பு சட்டம் 233 பிரிவின் கீழ் சாம்ரி விசாரிக்கப்படுவார் என புசி கூறினார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 30-ஆம் தேதி, கிளந்தான், கம்போங் பஞ்சோரில் அமைந்திருக்கும், அல்-சிட்டிக் மசூதியில் உரையாற்றியதன் பேரில் அவர் மீது விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்து மதத்திலிருந்து முஸ்லீம் மதத்துக்கு மாறியவரான அவர் மீது ஏற்கனவே ஒரு குற்றவியல் குற்றச்சாட்டு இருப்பதையும் காவல் துறையினர் உறுதி செய்தனர்.