ஹாங்காங் : இன்ஸ்டாகிராம், டிக் டாக், யூடியூப் தளங்களில் இயங்கும் சமூக ஊடக வாதிகளின் தனிப்பட்ட தகவல்கள் அடங்கிய தரவுகள் கசிந்திருப்பதாக ஹாங்காங்கின் சவுத் சீனா மார்னிங் போஸ்ட் ஊடகம் தெரிவித்தது.
பயனர்களின் மின்னஞ்சல் முகவரிகள், செல்பேசி எண்கள் அடங்கிய தரவுகள் இணையத்தில் பகிரங்கமாக்கப்பட்டதாகவும் அந்த செய்தி தெரிவித்தது.
ஹாங்காங்கில் பதிவு செய்யப்பட்ட நிறுவனம் ஒன்று சமூக ஊடகங்களில் தாக்கங்களை ஏற்படுத்தக் கூடிய சுமார் 235 மில்லியன் பயனர்களை அடையாளம் கண்டு அவர்களின் சொந்தத் தகவல்களை விற்பனை செய்துள்ளது இதன் மூலம் தெரிய வந்துள்ளது.
இதில் பெரும்பான்மையானவர்களின் தகவல்கள் இன்ஸ்டாகிராம் தளத்தில் இருந்து எடுக்கப்பட்டிருக்கிறது. இன்ஸ்டாகிராம் தளத்தின் உரிமையாளராக பேஸ்புக் நிறுவனம் திகழ்கிறது.
இன்ஸ்டாகிராமிலிருந்து மட்டும் சுமார் 95 மில்லியன் பேர்களின் தரவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.
டிக் டாக் தளத்திலிருந்து 42 மில்லியன் பேர்களின் தரவுகளும் யூடியூப் தளத்தில் இருந்து சுமார் 4 மில்லியன் பேர்களின் தரவுகளும் எடுக்கப்பட்டிருக்கின்றன. யூடியூப் தளத்தின் உரிமையாளர் கூகுள் நிறுவனம் ஆகும்.
டிக்டாக் போன்ற சீனா நாட்டு குறுஞ்செயலி தளங்களில் உள்ள பயனர்களின் சொந்தத் தகவல்கள் கள்ளத்தனமாக பயனர்களின் முன் அனுமதியின்றி மற்றவர்களுக்கு பரிமாற்றம் செய்யப்படுகின்றன என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகின்றன.
அண்மையில் சீனாவுடன் ஏற்பட்ட எல்லைத் தகராறுகளைத் தொடர்ந்து இந்தியா டிக்டாக் உள்ளிட்ட பல குறுஞ்செயலிகளை இந்தியாவில் தடை செய்தது. இந்த குறுஞ்செயலியின் இந்திய வணிகத்தை வாங்குவதற்கு முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் முயற்சி செய்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிக்டாக் தடை செய்யப்படும் உத்தரவை அமெரிக்கா அரசாங்கம் பிறப்பித்துள்ளது.
எனினும், 90 நாட்களுக்குள் டிக்டாக் செயலியை மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு விற்பனை செய்யும் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட வேண்டும் என அமெரிக்கா அவகாசம் வழங்கியிருக்கிறது. இல்லையேல் அந்த செயலி தடை செய்யப்படும் என அமெரிக்கா எச்சரித்திருக்கிறது.