Home One Line P1 சபா தேர்தல்: வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு- பிகேஆர் ஏமாற்றமா?

சபா தேர்தல்: வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு- பிகேஆர் ஏமாற்றமா?

600
0
SHARE
Ad

கோத்தா கினபாலு: சபா தேர்தலை முன்னிட்டு வாரிசான், நம்பிக்கைக் கூட்டணி, உப்கோ வேட்பாளர் பட்டியலை வெளியிட்டன.

பட்டியல் வெளியானதும் அதிர்ச்சியில், பிகேஆர் கட்சியைச் சேர்ந்தவர்கள் அரங்கை விட்டு வெளியேறியதாக மலேசியாகினி தெரிவித்துள்ளது.

வெளியேறியவர்கள், சபா பிகேஆர் கட்சித் தலைவர் கிறிஸ்டினா லியூவிடம் பேசிக் கொண்டிருந்ததாக அது தெரிவித்தது.

#TamilSchoolmychoice

அறிவிக்கப்பட்ட பெயர் பட்டியலில், பிகேஆருக்கு முன்பு குறிப்பிட்டது போல, 14 தொகுதிகள் வழங்கப்படவில்லை. அதில் பாதி மட்டுமே அக்கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.

நேற்று, பிகேஆர் 14 தொகுதிகளில் போட்டியிடும் என்று சபா பிகேஆர் தெரிவித்திருந்தது.

அபி-அபி, இனானாம், தெம்பாசுக், தம்பாருலி, மாதுஙோங், கிலிஹாஸ் மற்றும் சூக் ஆகிய தொகுதிகள் மட்டுமே பிகேஆருக்கு வழங்கப்பட்டுள்ளது.

தேர்தல் வேட்பாளர்கள் மேடைக்கு புகைப்படம் எடுப்பதற்காக அழைக்கப்பட்ட போது, கிறிஸ்டினா லியூ அதில் இடம்பெறவில்லை.

இதனிடையே, ஜசெக, அமானா கட்சிகள் வாரிசானின் தொகுதி ஒதுக்கீட்டில் எந்தவொரு பிரச்சனையும் இல்லை என்று தெரிவித்துள்ளன.

ஜசெக ஏழு இடங்களில் போட்டியிடுகிறது. அமானா ஒரு தொகுதியில் களம் இறங்குகிறது. வாரிசான் 54 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

இதனிடையே, மேடையில் பேசிய ஷாபி அப்டால், இம்மாத இறுதியில் சபா தேர்தலில் கட்சியின் கௌரவத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதற்குப் பதிலாக, அதிக தொகுதிகளில் வெற்றிப் பெறுவதை இலக்காகக் கொள்ள வேண்டும் என்று ஷாபி அப்டால் அன்வார் இப்ராகிமிடம் கூறியதாகக் கூறினார்.

அண்மையில், பிகேஆர் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான அன்வார் அவரது தனது வீட்டிற்குச் சென்றபோது இதுதான் அவரிடம் கூறப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

தேசிய கூட்டணியை இட ஒதுக்கீடு விநியோகிப்பது தொடர்பான பிரச்சனையை விளக்கிய ஷாபி, இதற்கு முன்னர் பிகேஆருக்கு பல தொகுதிகளை வழங்கியதாகக் கூறினார்.

இருப்பினும், பிகேஆர் இரண்டு தொகுதிகளை மட்டுமே வெல்ல முடிந்தது என்று கூறினார்.

“இது எங்களுக்கு தொகுதிகளை வழங்குவதற்கான நேரம் அல்ல, தேர்தலில் வெற்றி பெறுவதற்கான நேரம்

“எங்களுக்கு ஒரு சிறிய எண்ணிக்கையிலான தொகுதி கிடைத்தால், எங்கள் கட்சி இழிவாகப் பார்க்கப்படும் என்ற கருத்துக்கு இடமில்லை

“இது கட்சி கௌரவத்தின் விடயம் அல்ல. மிக முக்கியமான தேர்தல்களில் வெற்றி பெறுவது எங்களுக்கு முக்கியம்” என்று அவர் இன்று வாரிசான் சின்னத்தின் கீழ் போட்டியிடும் 54 வேட்பாளர்களை அறிவிப்பதற்கு முன்பு உரையாற்றினார்.

முன்னதாக, பிகேஆர் கட்சி தங்களின் சொந்த சின்னத்தின் கீழ் போட்டியிடுவதாகத் தெரிவித்திருந்தது. ஜசெக, அமானா கட்சிகள் வாரிசான் சின்னத்தின் கீழ் போட்டியிடுவதை ஏற்றுக் கொண்டன.