Home One Line P1 மொகிதினுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு துங்கு ரசாலி ஆதரவு

மொகிதினுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு துங்கு ரசாலி ஆதரவு

1061
0
SHARE
Ad

கோலாலம்பூர் : நாட்டில் அடுத்தடுத்து ஏற்பட்டு வரும் அரசியல் திருப்பங்களின் தொடர்ச்சியாக பிரதமர் மொகிதின் யாசினுக்கு எதிரான நாடாளுமன்றத் தீர்மானம் மீதான விவாதங்களுக்கு வழிவிட வேண்டுமென துங்கு ரசாலி ஹம்சா கேட்டுக் கொண்டுள்ளார்.

எதிர்வரும் நவம்பர் முதல் வாரத்தில் நாடாளுமன்றத் தொடர் தொடங்கவிருக்கிறது. எதிர்வரும் நாடாளுமன்றத் தொடரில் 2021-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் (பட்ஜெட்) சமர்ப்பிக்கப்படவிருக்கிறது.

துங்கு ரசாலி கையெழுத்திட்ட கடிதம் சமூக ஊடகங்களிலும், ஊடகங்களிலும் வெளியிடப்பட்டிருக்கிறது. 25 செப்டம்பர் 2020 தேதியிட்ட அந்தக் கடிதம் நாடாளுமன்ற அவைத் தலைவர் அசார் அசிசான் ஹருணிடம் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

செப்டம்பர் 23-ஆம் தேதி அன்வார் இப்ராகிம் அடுத்த பிரதமராவதற்கான நாடாளுமன்றப் பெரும்பான்மை தனக்கு இருப்பதாக அறிவித்தார். அந்த அறிவிப்பைத் தொடர்ந்து அடுத்த இரண்டு நாட்களில் துங்கு ரசாலி இந்தக் கடிதத்தை சமர்ப்பித்துள்ளார்.

நேற்று செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 13) துங்கு ரசாலி ஹம்சா பிற்பகல் 2.00 மணியளவில் மாமன்னரைச் சந்தித்தார்.

அந்தச் சந்திப்பைத் தொடர்ந்து இன்று அந்தக் கடிதம் வெளியிடப்பட்டிருக்கிறது.

குவா மூசாங் நாடாளுமன்ற உறுப்பினரான துங்கு ரசாலி ஹம்சா அம்னோ ஆலோசனை வாரியத்தின் தலைவருமாவார்.

நேற்று அன்வார் இப்ராகிம் தனது நாடாளுமன்றப் பெரும்பான்மையை நிரூபிக்கும் ஆவணங்களை மாமன்னரிடம் சமர்ப்பித்தார்.

அந்தச் சந்திப்பைத் தொடர்ந்து அடுத்த இரண்டு மணி நேரத்தில் மாமன்னர் துங்கு ரசாலியைச் சந்தித்தார். அந்தச் சந்திப்பு ஏன் என்பதற்கான தெளிவு தற்போது துங்கு ரசாலியின் கடிதம் மூலம் ஏற்பட்டிருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

பிரதமருக்கு எதிராகச் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் விவாதிக்கப்படுவது மிகவும் முக்கியம் என தனது கடிதத்தில் துங்கு ரசாலி தெரிவித்திருக்கிறார். பிரதமராகத் தொடர்வதற்கு மொகிதின் நாடாளுமன்றப் பெரும்பான்மையைக் கொண்டிருக்கிறாரா என்பதை நிர்ணயிக்க இந்த தீர்மானம் மீதான விவாதம் முக்கியமாகும் என துங்கு ரசாலி குறிப்பிட்டிருக்கிறார்.

மலேசிய அரசியலமைப்பு சட்டங்களின்படியும் இந்தத் தீர்மானம் முக்கியம் என தனது கடிதத்தில் துங்கு ரசாலி வாதிட்டிருக்கிறார்.

மொகிதின் தலைமையிலான நடப்பு அரசாங்கம் சட்டபூர்வமானதா என்பதும் நிர்ணயிக்கப்பட வேண்டும். நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தால் அந்த முடிவு அடுத்த கட்டமாக மாமன்னரிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

“நாடாளுமன்றப் பெரும்பான்மையையும், நம்பிக்கையையும் நிரூபிக்காமல் பிரதமர் தனது பொறுப்பில் தொடர்வதற்கு அவருக்கு உரிமையில்லை. இந்த உண்மை நிலையை எதிர்கொள்ளாமல் அவர் தவிர்த்து வருவது தவறான நோக்கத்துடன் செயல்படுவதாகும். மலேசிய அரசியலமைப்புக்கும் எதிரானதாகும்” என்றும் துங்கு ரசாலி மேலும் தனது கடிதத்தில் தெரிவித்திருக்கிறார்.

இத்தகைய தீர்மானத்தைத் தடுத்து நிறுத்துவதற்கான சட்டபூர்வமான காரணங்களும் இல்லை. எனவே, அடுத்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் எனவும் துங்கு ரசாலி அவைத் தலைவர் அசார் ஹருணைக் கேட்டுக் கொண்டுள்ளார்.