கோலாலம்பூர் : நாட்டின் குறிப்பிடத்தக்க கவிஞர்களில் ஒருவரான ப.இராமு கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி காலமானார்.
இறுதி வரை கவிதைகளோடு பயணம் செய்த , மறைந்தும் மறையாத கவிஞர் ப.ராமுவின் கவிதைத் தொகுப்பு “மண்ணிலிருந்து விண்ணுக்கு ஒரு கவிதை நிலா”.
இந்த நூலில் அவர் எழுதிய கவிதைகளோடு, அவருக்காக எழுதப்பட்ட கவிதாஞ்சலி கவிதைகளும் இணைக்கப்பட்டுள்ளன. இந்நூல் ப. ராமுவின் பிறந்தநாளான ஏப்ரல் 18-ஆம் தேதி வெளியீடு காண்கிறது.
இந்த நூல் வெளியீட்டு விழா ஏப்ரல் 18-ஆம் தேதியன்று மாலை மணி 4.00-க்கு, தலைநகர் மஇகா தலைமையகத்தில் உள்ள நேதாஜி மண்டபத்தில் நடைபெறுகிறது .
இந்த நூல் வெளிவருவதில் பக்கபலமாய் இருந்தவர் மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன். டத்தோஸ்ரீ சரவணன் அவர்களின் தலைமையிலேயே இந்த நூல் வெளியீட்டு விழா நடைபெறுகிறது.
கிள்ளான் பள்ளத்தாக்கில் வசிக்கும் தமிழ் ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள், நண்பர்கள் இந்த நூல் வெளியீட்டு விழாவில் கலந்து சிறப்பித்து, கவிஞர் ராமுவை கெளரவப்படுத்த அன்புடன் அழைக்கப்படுகிறார்கள் என ஏற்பாட்டுக் குழு சார்பில் நூல் தொகுப்பாளர் மு.மணிக்குமார் கேட்டுக் கொள்கிறார்.