கோலாலம்பூர் : கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி காலமான நாட்டின் குறிப்பிடத்தக்க கவிஞர்களில் ஒருவரான ப.இராமுவின் கவிதைகளும், அவரின் மறைவு குறித்த இரங்கல் கவிதைகளும் அடங்கிய “மண்ணிலிருந்து விண்ணுக்கு ஒரு கவிதை நிலா” என்ற நூலின் வெளியீட்டு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 18) வெளியீடு கண்டது.
ஏப்ரல் 18 இராமுவின் பிறந்த நாளுமாகும். அவரின் நூல் வெளியீட்டு விழாவுக்கு தலைமை தாங்கி நூலையும் வெளியிட்ட மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் சிறப்பு செய்தார்.
நூல் பதிப்புக்கும், வெளியீட்டுக்குமான செலவினங்களையும் சரவணனே ஏற்றுக் கொண்டார். நூல் வெளியீட்டுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் இராமுவின் நண்பரும் கவிஞருமான மு.மணிக்குமார் முன்னின்று நடத்தினார். மணிக்குமார் இந்த நூலைத் தொகுக்கும் பணியையும் செய்திருக்கிறார்.
இந்த நூலில் அவர் எழுதிய கவிதைகளோடு, அவருக்காக எழுதப்பட்ட கவிதாஞ்சலி கவிதைகளும் இணைக்கப்பட்டுள்ளன.
இந்த நூல் வெளியீட்டு விழா தலைநகர் மஇகா தலைமையகத்தில் உள்ள நேதாஜி மண்டபத்தில் நடைபெற்றது.
இராமுவின் நண்பர்களும், எழுத்தாளர்களும் என திரளானவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்தனர்.
நூல் வெளியீட்டின் மூலம் திரட்டப்பட்ட தொகை முழுவதும் இராமுவின் குடும்பத்திற்கு வழங்கப்பட்டது.
இராமு நினைவாக 500,000 ரிங்கிட் அறக்கட்டளை
இராமுவுக்கும் தனக்கும் இடையில் ஏற்பட்ட நட்பு, தொடர்பு குறித்து விவரித்த சரவணன், தனது நூலை வெளியிடத் தன்னை அணுகிய எழுத்தாளர்களுக்கு மத்தியில், தன்னைப் பற்றியே கவிதை புனைந்த கவிஞன் இராமு என புகழாரம் சூட்டினார்.
இதுவரை 12 நூல்களை எழுதி வெளியிட்டிருக்கும் இராமுவுக்கு இப்போது வெளியிடப்படுவது 13-வது நூல். இதில் அவர் மறைவு குறித்த இரங்கல் கவிதைகளும் இடம் பெற்றிருப்பதால் தனிச் சிறப்பு பெறுகிறது” என்றும் சரவணன் கூறினார்.
ப.இராமுவின் நினைவாக அறக்கட்டளை ஒன்று ஏற்படுத்தப்படும் என்றும் அதற்காக தான் 500,000 ரிங்கிட் வழங்குவதாகவும் சரவணன் பலத்த கரவொலிக்கிடையில் அறிவித்தார். இந்த அறக்கட்டளை மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு மலேசியத் தமிழ் எழுத்தாளர்களுக்கும், தமிழ் இலக்கியப் படைப்புகளுக்கும் நிதி உதவிகள் வழங்கப்படும் என்றும் சரவணன் தனதுரையில் மேலும் தெரிவித்தார்.
“நான் பாரதியாக நினைக்கும் ப.இராமுவிற்குச் சமர்ப்பணம் இந்த நூல் வெளியீடு” என்றும் சரவணன் தனதுரையில் குறிப்பிட்டார்.