கோலாலம்பூர் : கொரோனா பெருந்தொற்றின் தாக்கம் தமிழ்நாட்டில் தலைவிரித்தாடுகிறது. “உலகத் தமிழர்களே உயிர்காக்க நிதி வழங்குவீர்” என்ற கோரிக்கையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உலகத் தமிழர்களுக்கு விடுத்திருந்தார். அவரது வேண்டுகோளை ஏற்று, தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு கணிசமான நிதியை வழங்க ம.இ.கா சார்பாக டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் மற்றும் டத்தோஸ்ரீ எம். சரவணன் முன் வந்தனர். அதற்கான ஏற்பாடுகளை மஇகா தொடங்கியுள்ளது.
உலகமே கொரோனா தொற்றுக்கு ஆளாகிவரும் வேளையில், தமிழகத்தில் மிக மோசமான நிலையில் இந்த பெருந்தொற்று பரவி வருவதை நாம் அறிவோம். அங்கே பரவிவரும் கொரொனா மிக வீரியமான நச்சுயிரி (வைரஸ்) என்பதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். அதனால் இறப்பின் எண்ணிக்கை நாளுக்கு நாள் மிக வேகமாக உயர்ந்து வருகிறது.
மருத்துவ, பொருளாதார பிரச்சனைகள் என மிக இக்கட்டான சூழ்நிலையைத் தமிழக மக்கள் சந்தித்து வருவதால், அதனைச் சமாளிக்க காணொளி ஒன்றின் மூலமாக உலகத் தமிழர்களுக்கு, மு.க.ஸ்டாலின் இந்தக் கோரிக்கையை முன் வைத்திருந்தார். “புலம் பெயர்ந்த தமிழர்கள் இந்த இக்கட்டான தருணத்தில் தமிழ்நாட்டுக்கு உதவ நிதியளிக்க கேட்டுக் கொள்கிறேன்” என அந்தக் காணொளியின் வழி ஸ்டாலின் உருக்கமான வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதைத் தொடர்ந்து புலம்பெயர்ந்த உலகத் தமிழர்கள் தங்கள் தொப்புள் கொடி உறவுகளைக் காப்பாற்ற தங்களால் இயன்ற தொகையைச் செலுத்தி வருகின்றனர். விருப்பமுள்ள மலேசியர்களும் கூட இந்த நிவாரண நிதிக்கு நன்கொடைகளை வழங்க முன்வந்துள்ளனர்.
தமிழ்நாட்டை அடுத்து அதிகமாகத் தமிழர்கள் வாழும் நாடாக மலேசியா விளங்குகிறது. ஒவ்வொரு தமிழனின் பூர்வீகமும் தமிழ்நாடுதான். இன்றும் கூட நம்மில் பலர் தங்கள் சொந்தங்களையும், பந்தங்களையும் இந்தியாவில் கொண்டுள்ளனர். அப்படி நம் தொப்புள் கொடி உறவுகளாக இருக்கும் தமிழ்நாட்டு மக்கள் மிக மோசமாக அவதிப்படும் இந்த தருணத்தில் மனிதாபிமான அடிப்படையில் இந்த நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கப்படுகிறது.
விருப்பமுள்ளவர்கள் மட்டும் இந்த பொதுநலத்திட்டத்தில் இணையலாம். இது கட்டாயம் அல்ல. அவரவர் விருப்பம் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்க விரும்புவோர் ம.இ.காவின் உதவித்திட்டத்தில், CIMB 8010404760 எனும் வங்கிக்கணக்கில் தங்களால் இயன்ற நன்கொடையை செலுத்தலாம். வங்கியில் பணம் செலுத்தியவுடன் அந்தத் தகவலையும், பணம் செலுத்தியதற்கான ஆதாரச் சீட்டையும் (bank slip) 014-7317049 எனும் எண்ணுக்கு வாட்சாப் (Whatsapp) மூலம் அனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
“மிக மோசமாக தத்தளித்துக் கொண்டிருக்கும் கடல் கடந்த நம் உறவுகளுக்கு ஆத்மார்த்தமாக எந்த வற்புறுத்தலும் இல்லாமல் இந்த நிதியை வழங்கலாம். இது கட்டாயம் அல்ல, கருணை மட்டுமே” என மனித வள அமைச்சரும், மஇகா தேசியத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.