கோலாலம்பூர் : கடந்த ஜனவரி மாதத்தில் அமுலாக்கப்பட்ட அவசர கால சட்டத்தை அகற்றக் கோரி நாடாளுமன்றத்தில் 4 தீர்மானங்கள் எதிர்க்கட்சிகளால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
இந்தத் தீர்மானத்தைத் தடுத்து நிறுத்துவதற்கோ, மறுப்பதற்கோ நாடாளுமன்ற அவைத் தலைவருக்கு அதிகாரமில்லை என இந்தத் தீர்மானங்களைச் சமர்ப்பித்த புருவாஸ் நாடாளுமன்றத்திற்கான ஜசெக உறுப்பினர் இஙே கூ ஹாம் தெரிவித்துள்ளார்.
இந்தத் தீர்மானங்கள் ஜூலை 19-ஆம் தேதி சமர்ப்பிக்கப்பட்டன.
மலேசிய அரசியலமைப்பு சட்டம் விதி 150 (3) வரையறுத்தபடி அவசர கால சட்டங்கள் நாடாளுமன்றத்தில் பரிசீலிக்கப்பட வேண்டும் எனவும், எனவே அவைத் தலைவர் அசார் ஹாருண் இந்தத் தீர்மானங்களை நிராகரிக்க முடியாது எனவும் இஙே மேலும் குறிப்பிட்டார்.
இஙே சமர்ப்பித்துள்ள தீர்மானங்கள் ஜனவரியில் கொண்டுவரப்பட்ட அவசர கால சட்டம் மற்றும் மேலும் மூன்று அவசர கால சட்டங்களை இரத்து செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறது.
இந்தத் தீர்மானங்கள் மீதான விவாதங்கள் நடைபெற வேண்டும் என்பதால் ஜூலை 26 நாடாளுமன்றக் கூட்டத்தின் பரபரப்பும் எதிர்பார்ப்பும் அதிகரித்திருக்கிறது.
நாடாளுமன்றத்தில் ஒரு கடுமையான மோதலுக்கு எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன என்பதையே ஜசெகவின் தீர்மானங்கள் காட்டுகின்றன.