கோலாலம்பூர் : நாட்டின் 9-வது பிரதமராகப் பதவியேற்றிருக்கும் இஸ்மாயில் சாப்ரி, இன்று மாலை 5.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு பிரதமராகத் தன் முதல் உரையை வழங்கவிருக்கிறார்.
தொலைக்காட்சி அலைவரிசைகளில் நேரலையாக இந்த உரை ஒளிபரப்பாகும்.
அந்த உரையில் அவர் தெரிவிக்கவிருக்கும் முக்கிய அம்சங்கள் என்னவாக இருக்கும் என்பது குறித்த ஆர்வம் மக்களிடையே அதிகரித்திருக்கிறது.
அரசியல் நிலைத்தன்மையற்ற சூழலை அனுசரித்துப் போக வேண்டிய நிலைமையோடு பதவியேற்கும் இஸ்மாயில் சாப்ரி, நாட்டைக் கடுமையாகப் பாதித்திருக்கும் பொருளாதார, சுகாதார சீர்கேடுகளையும் மீட்டெடுக்க வேண்டிய பெரும் சவாலோடு பிரதமர் பதவியில் அமர்கிறார்.
இன்றைய உரையில் பிரதமராகத் தான் மேற்கொள்ளப் போகும் திட்டங்களையும், நடவடிக்கைகளையும் அவர் விவரிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது
நேற்று சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு இஸ்மாயில் சாப்ரிக்கு மாமன்னர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 20) பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெற்ற மலாய் ஆட்சியாளர்கள் மன்றத்தின் கூட்டத்திற்குப் பின்னர் இஸ்மாயில் சாப்ரி பிரதமராக நியமிக்கப்படுவதாக மாமன்னர் அறிவித்தார்.
அதைத் தொடர்ந்து இஸ்மாயில் சாப்ரி நேற்று பிரதமராகப் பதவியேற்றிருக்கிறார்.
இனி அடுத்த வாரத்தில் தனது புதிய அமைச்சரவையைப் பிரதமர் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.