கோலாலம்பூர் : இரண்டு முறை தடுப்பூசி போட்டுக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கே கொவிட்-தொற்று கண்டிருப்பது அந்த நோயின் தீவிரத் தாக்கத்தை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது.
கொவிட் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டபோது முதல் கட்டமாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் போடப்பட்டது.
அந்த வகையில் இரண்டு முறை முழுமையான தடுப்பூசி போட்டுக் கொண்ட நிலையிலும் பாங்கி நாடாளுமன்ற உறுப்பினர் ஓங் கியான் மிங்குக்கு கோவிட்-19 தொற்று உறுதி கண்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ஜசெகவைச் சேர்ந்த பாங்கி நாடாளுமன்ற உறுப்பினர் ஓங் கியான் மிங் தனக்கு கோவிட்-19 தொற்று கண்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக நேற்று திங்கட்கிழமை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.
நேற்று திங்கட்கிழமை மத்தியானம் அவர் நாடாளுமன்றத்திற்கும் வந்திருந்தார்.
“கடந்த புதன்கிழமை நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில் எனக்கு கோவிட் தொற்று இல்லை என்பது உறுதியானது. ஆனால் இப்போது கோவிட் தொற்று கண்டிருக்கிறது. எங்கிருந்து எனக்கு அந்த தொற்று பீடித்தது என்பது தெரியவில்லை” என அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.
மேலும் தனக்கு கோவிட் தொற்றுக்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை என்றும் குறிப்பிட்ட அவர், அடுத்த 10 நாட்களுக்கு தனது இல்லத்தில் தனிமைப்படுத்திக் கொள்ளப் போவதாகவும் தெரிவித்தார்.