Home நாடு மலாக்கா : 3 சட்டமன்றங்களில் 4 இந்திய வேட்பாளர்கள்! வெற்றி யாருக்கு?

மலாக்கா : 3 சட்டமன்றங்களில் 4 இந்திய வேட்பாளர்கள்! வெற்றி யாருக்கு?

732
0
SHARE
Ad

மலாக்கா : மலேசியாவில் மாறிவரும் அரசியல் கலாச்சாரம் இந்திய சமூகத்தினருக்கும் சில அரசியல் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்துள்ளது. முதன் முறையாக மலாக்கா சட்டமன்றங்களுக்கு 4 இந்திய வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றனர்.

இவர்களில் வெற்றி வாய்ப்பு யாருக்கு அமையும்?

#TamilSchoolmychoice

கடந்த பல பொதுத் தேர்தல்களில் மலாக்கா மாநில சட்டமன்றத் தொகுதிகளில் ஒரே ஒரு இந்தியர்தான் போட்டியிடுவார். மஇகா-தேசிய முன்னணி வேட்பாளராக ஒரே ஒரு இந்தியர் வேட்பாளர்தான் சட்டமன்றத்துக்கு நிறுத்தப்படுவார்.

எதிர்க்கட்சிகள் மலாக்கா மாநிலத்தைப் பொறுத்தவரை அவ்வளவாகக் கண்டு கொள்வதில்லை. பெரும்பான்மை மலாய் வாக்காளர்களைக் கொண்ட மாநிலம் என்பதால், அம்னோவின் ஆதிக்கமே அம்மாநிலத்தில் ஓங்கியிருந்தது.

புதிய அரசியல் சூழ்நிலை மலாக்கா மாநிலத்திலும் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த முறை சட்டமன்றத் தேர்தல்களில் களம் காண்பவர்களில் நால்வர் இந்தியர் என்பது இந்திய சமூகத்திற்கான பெருமை மிக்க அரசியல் வளர்ச்சி எனலாம்.

காடெக் தொகுதி நிலவரம் என்ன?

மலாக்கா மாநிலத்துக்கான சட்டமன்றத் தேர்தலில் அரசியல் பார்வையாளர்களால் ஆர்வத்துடன் பார்க்கப்படும் தொகுதி காடெக். அலோர்காஜா நாடாளுமன்றத்தின் கீழ் வரும் சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.

இங்கு மஇகா-தேசிய முன்னணி சார்பில் வி.பி.சண்முகம் போட்டியிடுகிறார். கடந்த 2018 பொதுத் தேர்தலில் மஇகாவின் வேட்பாளர் பி.பன்னீர் செல்வத்தைத் தோற்கடித்து காடெக் தொகுதியைக் கைப்பற்றினார் ஜி.சாமிநாதன். அவரே மீண்டும் ஜசெக-பக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்டிருக்கிறார்.

பெர்சாத்து கட்சியின் சார்பில் தேசியக் கூட்டணி வேட்பாளராக முகமட் அமிர் பித்ரி முஹாராம் காடெக் தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்த 3 கூட்டணிகளைத் தவிர்த்து மேலும் மூவர் இந்தத் தொகுதியில் போட்டியிடுகின்றனர்.

சுயேச்சைகளாக இருவர் போட்டியிடுகின்றனர். அசாஃபென் என்ற மலாய்க்கார வேட்பாளரும், மோகன் என்ற இந்திய வேட்பாளரும் காடெக் தொகுதியில் சுயேச்சைகளாகப் போட்டியிடுகின்றன.

இவர்களைத் தவிர்த்து லைலா நோரிண்டா பிந்தி மவுன் என்ற பெண்மணி புத்ரா கட்சியின் சார்பில் போட்டியிடுகின்றார். புத்ரா கட்சிக்கு அம்னோவின் முன்னாள் பிரமுகர் இப்ராகிம் அலி தலைமையேற்றுள்ளார்.

கடந்த பொதுத் தேர்தலில் இங்கு பாஸ் கட்சி போட்டியிட்டபோது 1,865 வாக்குகளைப் பெற்றது. இந்த மலாய் வாக்குகளின் பிளவினால்தான் ஜசெக இந்தத் தொகுதியை சாமிநாதன் மூலம் கைப்பற்ற முடிந்தது.

இப்போதும் பெர்சாத்து-பாஸ் இணைந்த கூட்டணி எத்தனை மலாய் வாக்குகளைப் பிரிக்கப் போகிறது என்பதைப் பொறுத்தே இந்தத் தொகுதியில் வெற்றியடையப் போவது தேசிய முன்னணியா பக்காத்தான் கூட்டணியா என்பது தெரியவரும்.

மேலும் சுயேச்சை மலாய் வேட்பாளரும், புத்ரா கட்சி வேட்பாளரும் எந்த அளவுக்கு வாக்குகளை – குறிப்பாக மலாய் வாக்குகளை – பெறப் போகிறார்கள் என்பதைப் பொறுத்து தேசிய முன்னணி அல்லது பக்காத்தான் ஹாரப்பானின் வெற்றி-தோல்வி நிர்ணயிக்கப்படும்.

ஆக இந்தத் தொகுதியைப் பொறுத்தவரை யார் வெற்றி பெற்றாலும் வெற்றி பெறுபவர் இந்தியராகத்தான் இருப்பார் என எதிர்பார்க்கலாம்.

60 விழுக்காடு மலாய் வாக்காளர், 24 விழுக்காடு சீனர்கள். 16 விழுக்காடு இந்தியர்கள் இந்தத் தொகுதியில் இருக்கின்றனர். மலாய் வாக்குகள் மூன்றாகப் பிரியும் என்பதால், சீன, இந்திய வாக்குகள்தான் வெற்றியாளரை நிர்ணயிக்கும் என்ற சுவாரசியமான சூழ்நிலையும் இந்தத் தொகுதியில் எழுந்திருக்கிறது.

ரிம் தொகுதியில் பிரசாந்த் குமார்

ஜாசின் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ்வரும் ரிம் தொகுதியில் பிகேஆர் சார்பில் பிரசாந்த் குமார் என்ற 27 வயது இளைஞர் நிறுத்தப்பட்டிருக்கிறார்.

பெரிக்காத்தான் நேஷனல், தேசிய முன்னணி என இரண்டு கூட்டணிகளும் இங்கு போட்டியிடுவதால், ரிம் தொகுதியில் மும்முனைப் போட்டி நிலவுகிறது.

பிகேஆர் போட்டியிடும் 11 தொகுதிகளில் இந்த முறை ரிம் தொகுதி இந்தியருக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது.

அம்னோவின் சார்பில் தேசிய முன்னணி வேட்பாளராக டத்தோ கைதிரா அபு சாஹார் இங்கு போட்டியிடுகிறார்.

பெர்சாத்து சார்பில் பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளராக அசாலினா அப்துல் ரஹ்மான் போட்டியிடுகிறார்.

66 விழுக்காட்டு மலாய் வாக்காளர்களைக் கொண்ட ரிம் தொகுதியில் பிகேஆர் சார்பில் இந்தியர் ஒருவர் நிறுத்தப்பட்டிருப்பது மாறிவரும் புதிய அரசியல் கலாச்சார மாற்றத்திற்கான சிறந்த அடையாளமாகப் பார்க்கலாம்.

20 விழுக்காட்டு சீனர்கள், 13 விழுக்காட்டு இந்திய வாக்காளர்கள், 1 விழுக்காடு மற்றவர்கள் – என்ற அளவில் விழுக்காடு ரீதியாக வாக்காளர்களைக் கொண்டிருக்கிறது ரிம்.

இந்தத் தொகுதியில் பிளவுபடும் மலாய் வாக்குகளினால், இந்திய, சீன வாக்காளர்களைக் கொண்டு பிரசாந்த் குமார் வெற்றி பெறக் கூடிய வாய்ப்புகள் நிறையவே இருக்கின்றன.

போட்டியிடுகின்ற இரண்டு வேட்பாளர்களும் மலாய்க்காரர்கள் என்பதால் 13 விழுக்காட்டு இந்தியர்களின் வாக்குகள் அப்படியே மொத்தமாக பிரசாந்த் குமார் வசம் செல்வதற்கான வாய்ப்புகளும் அதிகம்.

சீன வாக்காளர்களைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. அவர்களின் பெரும்பாலான வாக்குகள் ஜசெக சார்ந்திருக்கும் பக்காத்தான் ஹாரப்பான் பக்கமே செல்லும்.

கடந்த 2018 பொதுத் தேர்தலில் இந்தத் தொகுதியில் தேசிய முன்னணி-அம்னோவைச் சேர்ந்த டத்தோ கசாலி அகமட் போட்டியிட்டு 536 வாக்குகள் பெரும்பான்மையில் மட்டுமே வெற்றி பெற்றார். அந்தத் தேர்தலில் பாஸ் கட்சியும் போட்டியிட்டு, 1,262 வாக்குளைப் பெற்றது. இந்த முறை பாஸ் தேசியத் கூட்டணியில் இணைந்திருக்கிறது. இந்தத் தொகுதியில் பெர்சாத்து வேட்பாளர் போட்டியிடுகிறார். எனவே, பாஸ்-பெர்சாத்து இணைந்து எத்தனை வாக்குகளைப் பெறப் போகிறார்கள் என்பதைப் பொறுத்து பிரசாந்த் குமாரின் வெற்றி வாய்ப்பும் அமையும்.

மும்முனைப் போட்டிகள் – மலாய் வாக்குகள் பிளவு – ஆகிய காரணங்களால் ரிம் தொகுதியில் பிரசாந்த் குமார் பிரகாசம் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாகவே இருக்கின்றது.

அசாஹான் தொகுதியில் தனேஷ் பாசில்

2008-ஆம் ஆண்டு வரை மஇகா போட்டியிட்ட அசாஹான் தொகுதியில் பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளராக, கெராக்கான் கட்சி சார்பில் போட்டியிடுகிறார் தனேஷ் பாசில்.

இங்கு அவர் 6 முனைப் போட்டியை எதிர்நோக்குகிறார். இருப்பினும் நடப்பு சட்டமன்ற உறுப்பினராக இட்ரிஸ் ஹாரோன் இங்கு மீண்டும் போட்டியிடுவதாலும், பக்காத்தான் கூட்டணி வேட்பாளராக அவர் போட்டியிடுவதாலும் தனேஷ் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே கணிக்கப்படுகிறது.