கோலாலம்பூர் : மேற்கண்ட படங்கள் தற்போது சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹாமிடி, பொன்.வேதமூர்த்தியின் இல்லத்திற்கு தீபாவளியை முன்னிட்டு மேற்கொண்ட வருகையின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவை என நம்பப்படுகிறது.
இந்தப் படங்களில் இருவருக்கும் இடையில் காணப்படும் நெருக்கத்தைத் தொடர்ந்து எதிர்வரும் 15-வது பொதுத் தேர்தலில் வேதமூர்த்தி சார்ந்துள்ள மலேசிய முன்னேற்றக் கட்சியும், ஹிண்ட்ராப் இயக்கமும் இணைந்து தேசிய முன்னணிக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.
மலேசிய முன்னேற்றக் கட்சிக்கு தொகுதிகள் எதுவும் இதுவரை ஒதுக்கப்படவில்லை. கோல லங்காட் நாடாளுமன்றத் தொகுதியில் வேதமூர்த்தி தேசிய முன்னணி சின்னத்தின் கீழ் போட்டியிடலாம் என்ற ஆரூடங்களும் முன்வைக்கப்படுகின்றன.
அப்படி தொகுதிகள் ஏதும் ஒதுக்கப்படவில்லை என்றால். 2018 பொதுத் தேர்தலில் நடந்தது போன்று, எம்ஏபி என்ற மலேசிய முன்னேற்றக் கட்சி தேர்தல் களத்தில் பிரச்சாரங்களை மேற்கொண்டு விட்டு பின்னர் அதன் பிரதிநிதிகள் அமைச்சரவையில் இடம் பெறலாம்.
வேதமூர்த்தியும் 2018-இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் துன் மகாதீரையும் பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணியையும் ஆதரித்தார். ஆனால் எந்தத் தொகுதியிலும் போட்டியிடவில்லை.
துன் மகாதீர் வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததும் முழு அமைச்சராக வேதமூர்த்தி நியமிக்கப்பட்டார்.