பெட்டாலிங் ஜெயா : சிலாங்கூர் ஜசெக தலைவர் கோபிந்த் சிங் டியோ புக்கிட் காசிங் சட்டமன்றத் தொகுதிக்கு வேட்பாளராக ரிஷ்யாகரனுக்கு பதிலாக நிறுத்தப்படலாம் என்ற ஆரூடங்கள் எழுந்துள்ளன.
கோபிந்த் சிங் தற்போது டாமன்சாரா நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார். ஜசெகவின் தேசியத் தலைவராகவும் பதவி வகிக்கிறார்.
சிலாங்கூர் சட்டமன்றத்திற்குப் போட்டியிட்டு வெற்றி பெற்றால் அதன் மூலம் சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினராக கோபிந்த் சிங் நியமிக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது கணபதி ராவ் சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினராக இருக்கிறார். கோத்தா கமுனிங் சட்டமன்ற உறுப்பினராக கலைக்கப்பட்ட சிலாங்கூர் சட்டமன்றத்தில் பதவி வகித்தார். அவர் மீண்டும் போட்டியிடப் போவதில்லை என அறிவிக்கப்பட்டு விட்டது. கடந்த 15-வது பொதுத் தேர்தலில் அவர் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் கணபதி ராவ்வின் இளைய சகோதரர் ராயுடுவுக்கு சட்டமன்ற உறுப்பினராகப் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்படலாம் என்ற ஆரூடங்களும் நிலவுகின்றன.
புக்கிட் காசிங் நடப்பு சட்டமன்ற உறுப்பினரான ரிஷ்யாகரன் மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்படுமா அல்லது அவர் வேறு தொகுதிக்கு மாற்றப்படுவாரா என்பது போன்ற விவரங்களும் இன்னும் தெரியவில்லை.