ரோம் : உலகின் பணக்கார ஜனநாயக நாடுகளின் கூட்டமைப்பு ஜி-7 என்பதாகும். இந்த நாடுகளின் தலைவர்கள் இன்று வியாழக்கிழமை (ஜூன் 13) இத்தாலியில் ஒன்று கூடி பேச்சு வார்த்தை நடத்துகின்றனர்.
அந்த பேச்சு வார்த்தைகளின் ஒரு பகுதியாக ரஷியாவுடனான போரில் பின்னடைவு சந்திருக்கும் உக்ரேனுக்கு உதவ அந்நாடுகள் முன்வந்திருக்கின்றன. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரேனுக்கான உதவிகளை வழங்குவதில் தலைமை வகிக்கிறார். ஜி-7 மாநாட்டின் இடைவேளையில் அவர் உக்ரேன் அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கியை சந்திக்கவிருக்கிறார்.
ஜி-7 கூட்டமைப்பின் முக்கிய நாடுகள் ஒன்றாக இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனி-இத்தாலி-ஜப்பான் இணைந்த நாடுகளை எதிர்த்துப் போரிட்டன.
அந்த சமயத்தில் ரஷியாவும் கூட்டுப் படைகளுடன் இணைந்து போரிட்டாலும் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் நேட்டோ என்ற இராணுவக் கூட்டமைப்பைத் தோற்றுவித்து தனியாக இயங்கின. ரஷியாவும் தனக்கான நட்பு நாடுகளுடன் தனியாக இயங்கியது.
அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் ஜோ பைடன் டோனால்ட் டிரம்பைத் தோற்கடிப்பாரா – அல்லது மீண்டும் டிரம்ப் அதிபராக வெல்வாரா என்ற எதிர்பார்ப்புகள் வலுத்து வருகின்றன.