புத்ரா ஜெயா: அரசாங்கத்தின் நடப்பு தலைமைச் செயலாளர் முகமட் சுக்கி அலி ஓய்வு பெறுவதை முன்னிட்டு அவருக்கு பதிலாக ஷாம்சுல் அஸ்ரி அபு பாக்கார் அந்தப் பதவிக்கான பொறுப்பை எதிர்வரும் ஆகஸ்ட் 12 முதல் ஏற்கிறார். ஷாம்சுல் அஸ்ரி தற்போது பிரதமர் இலாகாவில் பொது-தனியார் கூட்டுத் தொழில் பிரிவின் தலைமைச் செயலாளராக பணிபுரிந்து வருகிறார்.
ஷாம்சுல் அஸ்ரியின் நியமனத்திற்கு மாமன்னர் சுல்தான் இப்ராகிம் சுல்தான் இஸ்கண்டார் ஒப்புதல் அளித்துள்ளார்.
நமது நாட்டின் அரசாங்க அலுவல்களிலும், பிரதமர் மற்றும் அமைச்சரவையுடன் இணைந்து பணியாற்றுவதிலும் முக்கியப் பங்கு வகிப்பவர் அரசாங்கத் தலைமைச் செயலாளர். அரசாங்க ஊழியர்களுக்கெல்லாம் இவரே தலைமைப் பொறுப்பு வகிக்கிறார். அமைச்சரவையில் கலந்து கொண்டு அமைச்சரவைக்கான செயலாளராகவும் இவரே செயல்படுகிறார்.
நடப்பு அரசாங்கத் தலைமைச் செயலாளர் டான்ஶ்ரீ முகமட் சுக்கியின் பதவிக் காலம் எதிர்வரும் ஆகஸ்ட் 10-ஆம் தேதியுடன் முடிவடைவதால் அவருக்குப் பதிலாக புதிய தலைமைச் செயலாளராக ஷாம்சுல் அஸ்ரி நியமிக்கப்பட்டுள்ளார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் முகமட் சுக்கி ஓய்வு பெற்ற பின்னர் அவரின் பணியை அரசாங்கம் 2 ஆண்டுகளுக்கு நீட்டித்தது. அந்த பதவி நீட்டிப்பு ஆகஸ்ட் 10-ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது.
அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றாலும் முகமட் சுக்கிக்கு முக்கியப் பொறுப்புகள் காத்திருக்கின்றன என அன்வார் தெரிவித்துள்ளார். இதன் மூலம் முகமட் சுக்கி, ஒரு முக்கிய அரசாங்கப் பொறுப்பில் நியமிக்கப்படலாம் என்ற ஆரூடங்கள் வலுத்துள்ளன.