Home நாடு அன்வார் இப்ராகிம்: “இந்தியர்களுக்கு போதுமான அளவுக்கு செய்யவில்லையா? இனியும் இனரீதியாகப் பிரிக்காதீர்கள்!”

அன்வார் இப்ராகிம்: “இந்தியர்களுக்கு போதுமான அளவுக்கு செய்யவில்லையா? இனியும் இனரீதியாகப் பிரிக்காதீர்கள்!”

186
0
SHARE
Ad

சுபாங் ஜெயா: நேற்று சனிக்கிழமை (டிசம்பர் 21) சுபாங் ஜெயாவிலுள்ள தங்கும் விடுதியொன்றில் உள்ளூர், அனைத்துலக ஊடகங்களின் ஊடகவியலாளர்களுடன் சந்திப்புக் கூட்டம் ஒன்றை நடத்திய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் பல்வேறு விவகாரங்கள் குறித்து விளக்கமளித்தார். ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் பதில் கூறினார்.சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்த ஊடகவியலாளர்களுடனான சந்திப்புக்குப் பின்னர் அவர்களுடன் மதிய உணவு உபசரிப்பிலும் அன்வார் கலந்து கொண்டார்.

இந்திய சமூகத்திற்கு வழங்கப்பட்டிருக்கும் நிதி ஒதுக்கீடுகள் போதுமானதாக இல்லை என நிலவும் அதிருப்தி குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அன்வார், இனியும் அரசாங்கத் திட்டங்களை இன ரீதியாகப் பிரித்துப் பார்க்கும் போக்கு தொடர வேண்டியதில்லை என வலியுறுத்தினார். ஏழ்மையை ஒழிக்கும் அரசாங்கத் திட்டங்களிலும், மக்கள் நலன் பயக்கும் திட்டங்களிலும் இனியும் இனரீதியாகப் பிரித்துப் பார்க்கும் நடைமுறையை அரசாங்கம் கடைப்பிடிக்காது என வலியுறுத்திய பிரதமர், ஏழ்மையை ஒழிப்பதில் இந்தியர்கள் என்றோ, மற்ற இனங்கள் என்றோ தாம் எப்போதும் பிரித்துப் பார்க்கப் போவதில்லை என உறுதிபடத் தெரிவித்தார்.

இந்தியர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் தெக்குன், அமானா இக்தியார், மித்ரா, கல்விக்கான நன்கொடை, சிறுதொழில் வணிகர்களுக்கான 6 மில்லியன் மானியம், என பல அம்சங்களையும் ஒருங்கிணைத்து இந்திய சமூகத்திற்கு வழங்கப்பட்டிருக்கும் நன்மைகளை முழுமையாகப் பார்க்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

#TamilSchoolmychoice

துணையமைச்சர் டத்தோஸ்ரீ ஆர்.ரமணன் மூலமாகவும் அவரின் அமைச்சு மூலமாகவும் இந்தியர்களுக்கான பல நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதையும் பிரதமர் சுட்டிக் காட்டினார்.

குறிப்பாக ஏழ்மை ஒழிப்பதில் அரசாங்கம் இன ரீதியாகவோ, சமூக ரீதியாகவோ பாகுபாடு காட்டுவதில்லை. சபா, சரவாக் மாநிலங்களிலும் ஏழைகள் இருக்கிறார்கள். மேற்கு மலேசியாவிலும் ஏழ்மை நிலையில் இந்திய சமூகத்தினர் பலர் இருக்கிறார்கள், மலாய் சமூகத்திலும் ஏழைகள் இருக்கிறார்கள் என்று கூறிய அன்வார், ஏழ்மையை ஒழிப்பதில் அவர்கள் யாராக இருந்தாலும் தான் பாகுபாடு காட்டியதில்லை – அனைத்து சமூகங்களையும் அரசாங்கம் சரி சமமாகத்தான் பார்க்கிறது – என்றும் வலியுறுத்தினார்.

“எல்லா இனங்களிடமிருந்தும், எல்லா மாநிலங்களிடமிருந்தும் கோரிக்கைகள் வருகின்றன. அவற்றை நான் வரவேற்கிறேன். அப்போதுதான் பிரச்சனைகளையும் தேவைகளையும் நம்மால் அறிந்து கொள்ள முடியும். ஆனால் எல்லாவற்றையும் தீர்த்து விட முடியாது. அவற்றுக்கான தீர்வுகளைக் காண்பதில் நாம் தொடர்ந்து முயற்சிகள் செய்து வருகிறோம். கடந்த 2 ஆண்டுகளில் எவ்வளவோ சீர்திருத்தங்களைச் செய்திருக்கிறோம். அதனைப் பாராட்டாமல் எதிர்க்கட்சிகள் அரசியல் லாபத்துக்காக குறைகளையே சுட்டிக் காட்டுகின்றன” என்றும் அன்வார் சாடினார்.