புத்ராஜெயா: அண்மையில் இரத்த அழுத்தம் அதிகரித்ததைத் தொடர்ந்து சுயநினைவிழந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரியை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் மீண்டும் அழைத்து, பல ஊழல் மற்றும் பண மோசடி வழக்குகள் குறித்து விசாரணை நடத்தும்.
கடந்த வாரம் பெரா நாடாளுமன்ற உறுப்பினருமான இஸ்மாயில் சாப்ரியிடம் இருந்து ஊழல் தடுப்பு ஆணையம் வாக்குமூலம் பெற்றுள்ளது.
“எங்களால் பெறப்பட்ட சமீபத்திய தகவல்கள் மற்றும் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு விசாரணை மேற்கொள்வோம். இஸ்மாயில் சாப்ரியை ஏற்கனவே அழைத்து ஐந்து மணி நேரம் விசாரணை செய்துள்ளோம். மீண்டும் அவரை அழைப்பதற்கான வாய்ப்பை நிராகரிக்கவில்லை, ஆனால் அது நேரம் மற்றும் சூழ்நிலைகளைப் பொறுத்தது, குறிப்பாக அவரது உடல்நிலை,” என்று ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் அசாம் பாக்கி கூறியிருக்கிறார்.
பிப்ரவரி 21 அன்று, இஸ்மாயில் சாப்ரியுடன் தொடர்புடைய இரண்டு ‘டத்தோ’ பட்டம் பெற்ற நபர்கள் உட்பட நான்கு முன்னாள் அதிகாரிகளை ஊழல் சம்பந்தப்பட்டதாக சந்தேகிக்கப்பட்டு ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணைக்காக தடுப்புக் காவலில் வைத்தது.
மேலும், ஓர் அறக்கட்டளையின் நிர்வாக அதிகாரி மற்றும் ஒரு சிறப்பு அதிகாரியின் உதவியாளராக இருந்த ஒரு பெண் ஆகியோரையும் ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்தது.
இஸ்மாயில் சாப்ரி தொடர்புடைய பல வழக்குகளை ஊழல் தடுப்பு ஆணையம் விசாரித்து வருகிறது, இதில் RM700 மில்லியன் மதிப்பிலான அரசாங்க செலவினங்கள் மற்றும் விளம்பர நோக்கங்களுக்கான ஒரு வழக்கும் அடங்கும்.