
கோலாலம்பூர்: இந்துமதம் சார்பில் பல விவாதங்களை போராட்டங்களை முன்னெடுத்து வரும் இந்து சமய செயற்பாட்டாளர் அருண் துரைசாமி வெளியிட்ட சர்ச்சைக்குரிய காணொலி தொடர்பில் அவர் மீதான விசாரணைகளை காவல் துறை முடுக்கியுள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை (மார்ச் 14) அருண் துரைசாமி காவல் துறை தலைமையகம் புக்கிட் அமான் வந்து இந்த விவகாரம் தொடர்பில் தனது வாக்குமூலத்தை வழங்கினார்.
அதைத் தொடர்ந்து அவரின் முகநூல் பக்கம் (பேஸ்புக்) முடக்கப்பட்டுள்ளது. அவரின் முகநூல் பக்க முகப்பில் பதிவிடப்பட்டுள்ள செய்தியில் காவல் துறையில் வாக்குமூலம் வழங்கிய பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் அவரின் காணொலிப் பதிவு நீக்கப்பட்டுள்ளது என்றும் அருண் துரைசாமி முகநூல் வாசகம் தெரிவித்தது. அவரின் முகநூல் பக்கம் 3 நாட்களுக்கு தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது எனவும் அந்த வாசகம் குறிப்பிட்டது.