
ரோம்: புதிய போப்பாண்டவரைத் தேர்ந்தெடுக்கும் முதல் சுற்று வாக்கெடுப்பில் யாரும் போதிய வாக்குகள் பெற்று இன்னும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து, புதிய போப்பாண்டவர் இன்னும் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதைக் குறிக்கும் வண்ணம் வத்திகான் நகரிலுள்ள சிஸ்டின் சேப்பல் என்னும் தேவாலயத்தின் புகைக் கூண்டிலிருந்து கறுப்பு நிற புகை வெளியேறியது.
அண்மையில் காலமான போப்பாண்டவர் பிரான்சிசுக்குப் பதிலாக புதிய போப்பாண்டவரைத் தேர்ந்தெடுக்க கார்டினல்கள் என்னும் 133 பாதிரிமார்கள் உலகம் எங்கிலுமிருந்து தற்போது வத்திகான் நகரில் கூடியுள்ளனர். இவர்கள் இரகசிய வாக்கெடுப்பு மூலம் புதிய போப்பாண்டவரைத் தேர்ந்தெடுப்பர். இதனையடுத்து அந்த பாதிரிமார்கள் தனிமைப்படுத்தப்பட்டு இன்று வியாழக்கிழமை இரண்டாவது சுற்று வாக்களிப்பில் பங்கெடுப்பர்.
புதிய போப்பாண்டவர் தேர்ந்தெடுக்கப்பட்டதும் வத்திகான் தேவாலயத்தின் புகைக் கூண்டிலிருந்து வெண்புகை வெளியேற்றப்படும்.
உலகம் எங்கும் உள்ள 1.4 பில்லியன் கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் ஆன்மீகத் தலைவராகத் திகழும் அடுத்த போப்பாண்டவர் யார் என்பதைக் காண உலகப் பொதுமக்கள் இன்னும் காத்திருக்க வேண்டும்.
பாதிரிமார்கள் ‘கோன்கிளேவ்’ (conclave) என்னும் சந்திப்புக் கூட்டத்தின் மூலம் புதிய போப்பாண்டவரைத் தேர்ந்தெடுப்பர். தங்களின் இரகசிய வாக்கெடுப்பை உறுதி செய்யும் வண்ணம் சத்தியப் பிரமாணம் எடுத்துள்ள அவர்கள், வெளியுலகத் தொடர்புகளைத் தவிர்க்கவும், தகவல்கள் கசிவதைத் தடுக்கும் நோக்கத்திலும் தங்களின் கைப்பேசி போன்ற கையடக்கக் கருவிகளையும் வத்திகான் நிர்வாகத்திடம் ஒப்படைத்து விட்டனர். புதிய போப்பாண்டவரைத் தேர்ந்தெடுக்கும் இரகசியக் கூட்டம் முடிவடைந்ததும்தான் கைப்பேசிகள் அவர்களிடம் மீண்டும் ஒப்படைக்கப்படும்.
தேவாலயத்தின் புகைக் கூண்டிலிருந்து வெண்புகை வருகிறதா? அல்லது கருநிறப்புகை வருகிறதா? என்பதைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் வத்திகானில் உள்ள தேவாலயத்தின் முன்பு கூடியிருந்தனர்.