Home 13வது பொதுத் தேர்தல் பெண்களும், ஏழைகளும் தேசிய முன்னணிக்கும் – நடுத்தர, நகர்ப்புறத்தினர் மக்கள் கூட்டணிக்கும் வாக்களித்தனர் – மெர்டேக்கா...

பெண்களும், ஏழைகளும் தேசிய முன்னணிக்கும் – நடுத்தர, நகர்ப்புறத்தினர் மக்கள் கூட்டணிக்கும் வாக்களித்தனர் – மெர்டேக்கா மையத்தின் ஆய்வு

590
0
SHARE
Ad

GE-SPR-Ballot-boxமே 19 – 13வது பொதுத் தேர்தல் குறித்த பல்வேறு ஆய்வுகளும் கருத்துக்களும் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் மெர்டேக்கா ஆய்வு மையம் வெளியிட்டுள்ளள தகவல்களில் பல சுவாரசியமான விவரங்கள் வெளியாகியுள்ளன.

#TamilSchoolmychoice

பெண்களும், ஏழை மலேசியர்களும் தேசிய முன்னணிக்கு வாக்களித்த வேளையில், நடுத்தர மற்றும் மேல்தட்டு மலேசியர்கள் மக்கள் கூட்டணிக்கு ஆதரவாக வாக்களித்தனர் என்பது இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகளில் ஒன்றாகும்.

பொதுத் தேர்தல் குறித்து தனிப்பட்ட, சுதந்திர ஆய்வுகளை மேற்கொண்ட மெர்டேக்கா மையத்தின் இயக்குநரான இப்ராகிம் சுஃபியான், ஆய்வில் கலந்து கொண்டவர்களில் 55 சதவீதத்தினர் தங்களுக்குத் தேவையான அரசியல் தகவல்களைப் பெற இணையம் மற்றும் சமூக வலைத் தளங்களை தாங்கள் நம்பியதாக கூறியுள்ளனர் என்று தெரிவித்தார்.

மலாயாப் பல்கலைக் கழகத்தின் ஜனநாயகம் மற்றும் தேர்தல் மையம் நடத்திய ஒரு கருத்தரங்கில் பேசிய இப்ராகிம் சுஃபியான் பெண்கள் பொதுவாக தேசிய முன்னணிக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர், ஆனால் ஆண்களோ மக்கள் கூட்டணிக்கு ஆதரவாக வாக்களித்தனர் என்றும் கூறியுள்ளார்.

ஆண்களில் பெரும்பாலோர் அரசியல் மற்றும் நடப்பு  விவகாரங்களை விவாதிக்கும் வலைத்தளங்களில் இணையம் மூலமாக ஈடுபட்டனர். ஆனால், பெண்கள் – அவர்கள் இளையவர்களாக இருந்தாலும் – இதுபோன்ற காரியங்களில் ஈடுபடவில்லை.

விவேகக் கைத்தொலைபேசிகளின் பயன்பாடு

இன்றைய காலகட்டத்தில் மலேசியர்களில் மூன்றில் ஒரு பிரிவினர் “ஸ்மார்ட்போன்” எனப்படும் விவேகக் கைத்தொலைபேசிகளை பயன்படுத்துகின்றனர். ஆனால் எதிர்காலத்தில் இந்த எண்ணிக்கை உயர்ந்து நாட்டிலுள்ளவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் விவேகக் கைத்தொலைபேசிகளைப் பயன்படுத்துவர் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

வேலை செய்பவர்கள், குறைந்த வருமானம் ஈட்டுபவர்கள் பெரும்பாலும் தேசிய முன்னணிக்கே வாக்களித்துள்ளனர். ஆனால், நடுத்தர மற்றும் மேல்தட்டு மக்கள் பக்காத்தான் ராயான் எனப்படும் மக்கள் கூட்டணிக்கு வாக்களித்துள்ளனர்.

இதிலிருந்து மலேசியர்கள் பொதுத் தேர்தலில் இவ்வாறு வகுப்பு வாரியாக பிரிந்து வாக்களித்திருக்கின்றார்கள் என்பதும் ஆய்வுகள் மூலம் தெளிவாகியுள்ளது.

தேசிய முன்னணி பக்கம் சாய்ந்தவர்களிடம் காரணம் கேட்டபோது, நாட்டின் மேம்பாடு, மலாய்க்காரர்களுக்கான உரிமைகள், கடந்த கால சாதனைகளின் ஆதாரம், போன்றவற்றை தாங்கள் தேசிய முன்னணியைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணங்களாகக் குறிப்பிட்டார்கள்.

இவர்களில் பெரும்பாலோர் நகரங்களுக்கு வெளியே இருப்பவர்கள் என்பதோடு பிஆர்எம் 1 எனப்படும் அரசாங்க மான்யங்களைப் பெற்றவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தேசிய முன்னணிக்கு எதிராக வாக்களித்தவர்களிடம் அதற்கான காரணத்தைக் கேட்டபோது, சிறுபான்மை இனத்தவரின் நலன்களைக் காக்கத் தவறியது, இனங்களுக்கிடையிலான உறவுகள் சீர்குலைந்தது, எங்கும் வியாபித்திருக்கும் ஊழல், போன்றவற்றைக் காரணங்களாகக் குறிப்பிட்டுள்ளார்கள்.

மக்கள் கூட்டணிக்கு ஆதரவாக வாக்களித்தவர்கள், அந்த கூட்டணி பல இனங்களையும் பிரதிபலிக்கின்றது, தூய்மையான நிர்வாகத்தை வழங்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகின்றது போன்ற காரணங்களை அந்த கூட்டணியின் சாதக அம்சங்களாகப் பார்த்தனர்.

மூன்று கூட்டணிக் கட்சிகளுக்கிடையில் அடிக்கடி நடக்கும் மோதல்கள், அவர்களுக்குள் இருக்கும் ஒன்றுபடாத் தன்மை ஆகியவை மக்கள் கூட்டணிக்கு எதிரான அம்சங்களாக வாக்காளர்களால் பார்க்கப்பட்டன.

இந்த ஆய்வுகளின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ள மற்றொரு கண்டுபிடிப்பு என்னவென்றால் வாக்காளர்கள் இனவாரியாக வாக்களிக்காமல், தேசிய முன்னணி மற்றும் மக்கள் கூட்டணி ஆகிய இரு கூட்டணிகளும் மக்கள் முன் வைத்த கொள்கைகள் அடிப்படையில்தான் பெருவாரியாக வாக்களித்துள்ளனர் என்பதாகும்.

2013 பொதுத் தேர்தல் சீனர்களின் சுனாமி என்பதும் உண்மையல்ல என்றும் மெர்டேக்கா ஆய்வு மையத்தினர் குறிப்பிட்டுள்ளனர். காரணம், நகர்ப்புற மலாய்க்காரர்களும் மக்கள் கூட்டணிக்கு ஆதரவாக வாக்களித்திருக்கின்றார்கள் என்பதுதான்.

2013 பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி கண்ட வரலாறு காணாத தோல்விக்குக் காரணம், நடுத்தர மக்களும் நகர்ப்புற மக்களும் தேசிய முன்னணியை ஆதரிக்காமல் போனதுதான் என்பதையும் தங்களின் ஆய்வுகள் தெரிவிப்பதாகவும் மெர்டேக்கா ஆய்வு மையம் கண்டறிந்துள்ளது.

இதனால், நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்களுக்கிடையிலான இடைவெளி மேலும் அதிகரித்துள்ளது என்பதையும் ஆய்வுகள் காட்டியுள்ளன.

-மலேசியன் இன்சைடர்