புதுதில்லி, ஜூலை 3- உத்தரகண்ட் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவ ஜப்பான் ரூ.1.19 கோடி நிவாரண நிதி அறிவித்துள்ளது.
உத்தரகண்ட் மாநிலம் கேதார்நாத் உள்ளிட்ட சில இடங்களில் அண்மையில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் ஏராளமானோர் உயிரிழந்தனர். பலர் பாதிக்கப்பட்டனர்.
அவர்களுக்கு உதவ பல தரப்பில் இருந்தும் நிவாரண உதவிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஜப்பான் ரூ.1.19 கோடி நிவாரண நிதி அளிப்பதாக செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே (படம்) எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டு இருப்பதாவது:-
உத்தரகண்ட் மற்றும் இந்தியாவின் வட மாநிலங்கள் சிலவற்றில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் உயிரிழப்புகளும், சொத்துகளுக்கு சேதங்களும் ஏற்பட்டிருப்பதை அறிந்து நான் அதிர்ச்சி அடைந்தேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஜப்பான் அரசு சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடும் வகையில் இந்தியாவுக்கு நிவாரண நிதியாக ரூ.1.19 கோடி வழங்க ஜப்பான் அரசு முடிவு செய்துள்ளது.
இது தவிர உத்தரகண்டில் மத்திய மற்றும் நீண்ட கால மறுகட்டமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கான முயற்சிகளுக்கும் ஜப்பான் உதவிகள் அளிக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கடிதம் தில்லியில் உள்ள ஜப்பான் தூதரகம் மூலம் பிரதமரிடம் ஒப்படைக்கப்பட்டது.