கோலாலம்பூர், செப் 23 – மறைந்த முன்னாள் மலேசிய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் சின் பெங்கின் அஸ்தியை மலேசியாவிற்குள் கொண்டுவர அனுமதிக்கக் கூடாது என்ற சர்ச்சைகள் ஒருபுறம் இருக்க, சிங் பெங் இறந்த தேதி குறித்து தற்போது மற்றொரு சர்ச்சை எழுந்துள்ளது.
சிங் பெங் கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதி மலேசியா தினமன்று இறக்கவில்லை என்றும், அதற்கு முன்னதாகவே செப்டம்பர் 15 ஆம் தேதி அவர் உயிர் பிரிந்தது என்றும் உத்துசான் மலேசியாவின் வார இறுதி நாளேடான மிங்குவான் மலேசியாவில் செய்தி வெளியிடப்பட்டது.
மேலும், 50 வது மலேசிய தினத்தை நினைவுறுத்தும் வகையில் சின் பெங்கின் மறைவு போலியாக அறிவிக்கப்பட்டது என்றும் அந்நாளேடு தெரிவித்தது.
உத்துசான் மலேசியாவின் செய்தி குறித்து மசீச கட்சி நேற்று வெளியிட்ட அறிக்கையில், சின் பெங்கின் மறைவு குறித்து அடிப்படை ஆதாரமற்ற செய்திகளை வெளியிட்டு அவரது குடும்பத்தினரை காயப்படுத்துவதை விடுத்து அவரது இறப்புக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.