புதுடெல்லி, மே 10 – யோகா குரு பாபா ராம்தேவ், சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியின் போது, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி, தலித் இனத்தவரின் வீடுகளுக்கு தேனிலவு செல்வதாக கூறியதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதுதொடர்பாக லக்னோ தொடங்கி பரவலாக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் பாபா ராம்தேவ் சார்பில் ஒரு மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில், தன் மீது கட்டாயமான நடவடிக்கை எடுக்க தடை விதிக்கவும், நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை லக்னோவுக்கோ அல்லது நீதிமன்றம் விரும்புகின்ற இடத்திலோ ஒரே வழக்காக இணைக்கவும் உத்தரவிடுமாறு கோரப்பட்டிருந்தது.
இந்த மனுவை தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான அமர்வு நேற்று விசாரித்து, இந்த விவகாரத்தில் ராம்தேவ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விசாரணைக்கு தடை விதித்தது.
மேலும், அவருக்கு எதிராக புகார் செய்தவர்களின் பயணச்செலவு வகைக்கு பாபா ராம்தேவ் ரூ.10 லட்சம் முந்தொகை பணம் செலுத்துமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கு பதிவாகியுள்ள மாநிலங்களுக்கு நோட்டீசு அனுப்பவும் உத்தரவிடப்பட்டது.