சிரம்பான், ஜூன் 12 – பெற்றோர்களில் ஒருவர் இஸ்லாம் மதத்தைத் தழுவிய நிலையில் பாதுகாப்பு உரிமை போராட்டத்திற்கு சம்பந்தப்பட்ட பிள்ளைகளை சிறார் இல்லத்திற்கு அனுப்பப்பட வேண்டும் என்றும், அந்தப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வரையில் இவ்விவகாரத்தில் காவல்துறை தலையிடாது என்றும் போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபுபாக்கார் கூறியுள்ளார்.
இந்நிலையில், பராமரிப்பு உரிமை போராட்டத்தில் சம்பந்தப்பட்ட குழந்தைகளை சிறார் இல்லத்திற்கு அனுப்பப்பட வேண்டும் என்ற தனது ஆலோசனையை தான் மீட்டுக் கொள்ளப் போவதில்லை என்றும், எக்காரணத்தைக் கொண்டு இவ்விவகாரத்தில் தான் பின்வாங்கப் போவதில்லை என்றும் சிரம்பானில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர் திட்டவட்டமாக கூறினார்.
இதில் ஷரியா மற்றும் சிவில் சட்டத் துறைகள் சம்பந்தப்பட்டவையாகும். இதில் காவல்துறை தலையீடு இருக்காது என்று காலிட் தெரிவித்தார்.
பேராக் மாநிலத்திலும் நெகிரி செம்பிலான் மாநிலத்திலும் பெற்றோரில் ஒருவர் இஸ்லாம் மதத்திற்கு மாறி, பிள்ளைகளை தங்களிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றங்களை அணுகி வரும் நிலையில், அவர்களின் பிள்ளைகளை சிறார் இல்லத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று காலிட் அண்மையில் ஆலோசனை கூறினார்.
அவரது கருத்திற்கு முக்கியத் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.