Home நாடு ஆபாச வலைப்பதிவாளர் ஆல்வின் டானை பிடிக்க காவல்துறை தீவிர தேடுதல் வேட்டை!

ஆபாச வலைப்பதிவாளர் ஆல்வின் டானை பிடிக்க காவல்துறை தீவிர தேடுதல் வேட்டை!

1152
0
SHARE
Ad

alvin sex bloggerகோலாலம்பூர், ஆகஸ்ட் 28 – ஆபாச புகைப்படங்கள் மற்றும் இஸ்லாமுக்கு எதிரான விமர்சனங்களை தங்கள் இணையத்தளத்தில் பதிவு செய்து சர்ச்சையை ஏற்படுத்திய ஆல்வின் டானை அவரது வழக்கிற்காக மலேசிய காவல்துறை தீவிரமாக தேடி வருகின்றது.

அவரது மீதான வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டிய ஆல்வின், தப்பிச் சென்று சிங்கப்பூரில் பதுங்கி இருக்கலாம் என்று காவல்துறை சந்தேகப்படுகின்றது.

இந்நிலையில், ஆல்வின் டான் சிங்கப்பூரில் இல்லை என்று அந்நாட்டு பிரபல ஆங்கில பத்திரிகையான தி ஸ்டெரெயிட்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

இது குறித்து ஆல்வின் டானின் வழக்கறிஞர் சோங் ஜூ டியான் கூறுகையில், “ஆல்வின் கடந்த மே மாதன் ஒரு ஆவணப்படத்தை தயாரிக்க சிங்கப்பூர் சென்றுவிட்டு, ஜூன் 3 -ம் தேதியே தனது கடவுச்சீட்டை காவல்துறையிடம் ஒப்படைத்திருக்க வேண்டும். எனினும் ஜூன் மாதத்திற்குப் பிறகு அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

ஆல்வின் டான் (வயது 26), அவரது காதலி விவியான் லீ (வயது 25) இவர்கள் இருவரும் ‘ஆல்விவி’ என்ற இணையத்தளம் ஒன்றை நிறுவி, அதில் தாங்கள் இருவரும் படுக்கையறையில் இருப்பது போன்ற பல ஆபாசமான புகைப்படங்களை வெளியிட்டு வந்தனர். அவர்களது இது போன்ற புகைப்படங்களைக் காண அவர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர்.

இந்நிலையில், கடந்த 2013 -ம் ஆண்டு, ஜூலை மாதம் இந்த ஜோடியின் அநாகரிகமான செயல்பாடுகள் உச்சத்தை அடைந்தன. இஸ்லாம் மதத்தினர் அனைவரும் நோன்பு இருந்த வேளையில், “பக்குத்தேவுடன் நோன்பு திறக்க வாருங்கள். நல்ல வாசனையுடன் ஹலால் முத்திரை கொண்ட சுவையான உணவு” என்று பன்றி இறைச்சியை கையில் வைத்திருப்பது போன்ற படம் ஒன்றை இந்த ஜோடி தங்களை இணையத்தளத்தில் வெளியிட்டது.

இதனால் நாடெங்கிலும் இஸ்லாம் மதத்தினரை கொந்தளித்தனர். இந்த ஜோடியின் மீது பல்வேறு இஸ்லாம் அமைப்புகள் புகார் அளித்தன. இதனால் காவல்துறை அவர்கள் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தியது.

இஸ்லாம் மதத்தினரை இழிவுபடுத்தியது, ஆபாச படங்களை வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்தது போன்ற 3 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன. பின்னர் இருவரும் தலா 30,000 ரிங்கிட் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இதனிடையே, தாங்கள் ஒரு ஆவணப்படம் எடுக்க சிங்கப்பூர் செல்ல வேண்டும் என்றும், தங்களது கடவுச்சீட்டை கொடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்க வேண்டும் என்றும் இந்த ஜோடி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.

அதனைத் தொடர்ந்து கடந்த மே 12-ம் தேதி, நீதிமன்றம் அவர்களை கடவுச்சீட்டை கொடுக்க உத்தரவிட்டது. அதே வேளையில், அவர்கள் இருவரும் ஜூன் 3 -ம் தேதிக்குள் மீண்டும் கடவுச்சீட்டை ஒப்படைத்துவிட வேண்டும் என்றும் கட்டளையிட்டிருந்தது.

இந்நிலையில், ஆல்வின் டான் தனது கடவுச்சீட்டை ஒப்படைக்காமல் பதுங்கிவிட்டதால், கடந்த வெள்ளிக்கிழமை நீதிமன்றம் அவரை கைது செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டதோடு, அவரது பிணைத்தொகையில் இருந்து 20,000 ரிங்கிட்டையும் அபராதமாக எடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.