Home நாடு மலேசிய கோடீஸ்வரர் ஆனந்த கிருஷ்ணன், தயாநிதி மாறன், கலாநிதி மாறன் – மீது இந்தியக் காவல்...

மலேசிய கோடீஸ்வரர் ஆனந்த கிருஷ்ணன், தயாநிதி மாறன், கலாநிதி மாறன் – மீது இந்தியக் காவல் துறை குற்ற வழக்கு பதிவு

2237
0
SHARE
Ad

Ananda-Krishnan-sliderபுதுடில்லி, ஆகஸ்ட் 30 – இந்தியாவின் மத்திய காவல் துறையினர் மலேசியாவின் இரண்டாவது பெரிய பணக்காரரான டான்ஸ்ரீ டி.ஆனந்த கிருஷ்ணன் மீதும், அவரது நிறுவன நிர்வாகி அகஸ்டஸ் ரால்ப் மார்ஷல் மீதும் குற்ற வழக்கொன்றை பதிவு செய்துள்ளனர்.

எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனம் இந்திய கைத்தொலைபேசி நிறுவனமான ஏர்செல் நிறுவனத்தை வாங்கியதன் தொடர்பில் ஊழல் நடந்துள்ளதாக குற்றம் சாட்டி இந்த வழக்கு புதுடில்லி நீதிமன்றத்தில் நேற்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனந்த கிருஷ்ணன் மலேசியாவின் இரண்டாவது பெரிய பணக்காரர் ஆவார்.

#TamilSchoolmychoice

மாறன் சகோதரர்கள் மீதும் வழக்கு

ஆனந்த கிருஷ்ணனுடன், முன்னாள் அமைச்சரான தயாநிதி மாறன், அவரது சகோதரரும் சன் டிவி உரிமையாளருமான கோடீஸ்வரர் கலாநிதி மாறன் ஆகியோரும் குற்றப் பதிவில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

தயாநிதி மாறன் 2004ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டுவரை இந்தியாவின் காங்கிரஸ் கட்சியின் மத்திய அமைச்சரவையில் தொலைத் தொடர்பு அமைச்சராக திமுகவைப் பிரதிநிதித்து பதவி வகித்தவராவார்.

இந்தியாவின் குற்றங்களுக்கு எதிரான உச்ச அமைப்பான சிபிஐ எனப்படும் (Central Bureau of Investigation-CBI) சக்தி வாய்ந்த மத்திய புலனாய்வுத் துறை இந்த வழக்கை பதிவு செய்துள்ளது.

வழக்கின் சாராம்சம்

Dayanidi Maran 440 x 2152006ஆம் ஆண்டில்,  ஆனந்த கிருஷ்ணன் உரிமையாளராக இருக்கும் மலேசியாவின் மிகப் பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமான மேக்சிஸ் நிறுவனம், இந்தியாவின் ஏர்செல் என்ற தொலைத்தொடர்பு நிறுவனத்தில் பெருமளவில் முதலீடு செய்து அந்நிறுவனத்தைக் கையகப்படுத்தியது.

சாதாரணமான வணிக முதலீடாகக் கருதப்பட்ட இந்த விவகாரம் பின்னர் 2011இல் சிபிஐ விசாரணைகளை மேற்கொள்ளும் வண்ணம் விசுவரூபம் எடுத்தது.

ஏர்செல்லின் முன்னாள் உரிமையாளருக்கு அப்போதைய அமைச்சரான தயாநிதி மாறன் நெருக்குதல் கொடுத்து, அந்நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை ஆனந்த கிருஷ்ணனுக்கு விற்பனை செய்ய வைத்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

நேற்று வெளியிட்ட அறிக்கையில், தங்களின் விசாரணையின் வழி, தயாநிதி மாறன் தனது தொலைத் தொடர்பு அமைச்சர் பதவி அதிகாரத்தை தவறுதலாகப் பயன்படுத்தினார் என்பதும், சென்னையைத் தலைமையகமாகக் கொண்ட ஏர்செல் நிறுவனத்தின் வணிக சூழலை சாதாரண காரணங்கள் காட்டி நெருக்குதலுக்கு உள்ளாக்கினார் என்பதும் அதன் காரணமாக தொலைத்தொடர்பு வணிகத்திலிருந்து வெளியேறவும் அந்த வணிகத்தை மலேசிய நிறுவனத்திற்கு விற்பனை செய்யும் நெருக்குதலையும் ஏர்செல் நிறுவனத்திற்கு எதிராக உருவாக்கினார் என்பதும் தெரிய வந்துள்ளதாக, சிபிஐ கூறியுள்ளது.

393 மில்லியன் ரிங்கிட் சட்டவிரோத பலன்கள்

Aircel Logoநெருக்குதலுக்கு ஏற்ப ஏர்செல் விற்பனை செய்யப்பட்டதில், மலேசிய ரிங்கிட் 393 மில்லியனுக்கு நிகராக சுமார் 7.42 பில்லியன் ரூபாய்க்கான சட்டவிரோத பலன்களை கலாநிதி மாறனின் சன் டிவி குழுமம் பெற்றிருக்கின்றது.

இதில் 5.49 பில்லியன் ரூபாய், சன் குழுமத்தில் பங்குகளை ஆனந்த கிருஷ்ணன் வாங்குவதற்கு பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

இவர்கள் அனைவரும் இணைந்து குற்ற சதியாலோசனை நடத்தியிருக்கின்றனர் என்பதுதான் சிபிஐ சாட்டியுள்ள குற்றச்சாட்டின் அடிப்படையாகும்.

காவல் துறை சமர்ப்பித்துள்ள குற்றப் பத்திரிக்கையில் ஆனந்த கிருஷ்ணனின் நிறுவனங்களான மேக்சிஸ், ஆஸ்ட்ரோ, சவுத் ஆசியா எண்டர்டெயிண்மெண்ட் ஹோல்டிங்க்ஸ் ஆகியவையும், கலாநிதி மாறனின் சன் டிவி குழுமமும் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளன.

இதற்கு முன்னர் 2011இல் இது குறித்து கருத்துரைத்திருந்த தயாநிதி மாறன் இந்த விவகாரத்தில் எந்தவித தவறுதல்களும் நடக்கவில்லை என்றும் விசாரணைக்குத் தனது முழு ஒத்துழைப்பை வழங்கியுள்ளதாகவும் கூறியிருந்தார்.