மனாகுவா, செப்டம்பர் 8 – லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான நிகாராகுவாவின் தலைநகரான மனாகுவாவை சிறிய விண்கல் ஒன்று தாக்கியதாக, அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
கடந்த சனிக் கிழமை இரவு 11.00 மணி அளவில், மனாகுவா நகரின் விமான நிலையத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில், பலத்த சத்தம் ஒன்று கேட்டதாகவும், அதனைத் தொடர்ந்து அந்த பகுதி முழுவதும் மிகப்பெரிய அதிர்வும் உணரப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
இது குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் அந்த பகுதியில் சிறிய விண்கல் ஒன்று தாக்கியது கண்டறியப்பட்டுள்ளது. தாக்கப்பட்ட பகுதியில், சுமார் 39 அடி குறுக்களவு கொண்ட மிகப்பெரிய பள்ளம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
மேலும் குறிப்பிட்ட அந்த இடம் அடர்ந்த வனப்பகுதி என்பதால் அதிர்ஷ்டவசமாக அசம்பாவித சம்பவங்கள் ஏதும் ஏற்படவில்லை என்று கூறப்படுகின்றது. இது குறித்து அந்நாட்டு அறிவியலாளர்கள் ஊடகங்களுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-
“விண்கல் விழுந்த ஓசையும் அதிர்வும் மனாகுவா முழுவதும் உணரப்பட்டது. நிலநடுக்கத்தை அளவீடு செய்யும் கருவியிலும் அதன் தாக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட அனைத்து ஆதாரங்களும், விண்கல் விழுந்ததை உறுதி செய்துள்ளன” என்று கூறியுள்ளனர்.
இராட்சத விண்கற்களால் உலகம் அழியும் என்று சமீபத்தில் கூறப்பட்டுள்ள நிலையில், நிகாராகுவா நாட்டில் விழுந்துள்ள விண்கல் உலக அழிவிற்கு தொடக்கமாக இருக்கலாம் என்று ஊடகங்களில் கூறப்படுகின்றது.