Home நாடு “விவேகானந்தர் ஆசிரம நிர்வாகத்தை ஊழல் தடுப்பு ஆணையம் விசாரிக்க வேண்டும்” – வேதமூர்த்தி

“விவேகானந்தர் ஆசிரம நிர்வாகத்தை ஊழல் தடுப்பு ஆணையம் விசாரிக்க வேண்டும்” – வேதமூர்த்தி

903
0
SHARE
Ad

vivekananda ashramகோலாலம்பூர், நவம்பர் 8 – விவேகானந்தர் ஆசிரம நிர்வாகத்தை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் உடனே விசாரிக்க வேண்டும் என்று ஹிண்ட்ராஃப் இயக்கத்தின் தலைவர் பொ.வேதமூர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

நேற்று ஹிண்ட்ராஃப் சார்பாக வெளியிட்ட அறிக்கையொன்றில் அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

“இந்த ஆண்டு பிப்ரவரித் திங்களில் தாக்கல் செய்யப்பட்ட அந்த ஆசிரமத்தின் ஆண்டறிக்கை, தனிப்பட்ட ஒருவர் மூலம் ஹிண்ட்ராஃப் தலைமையகத்திற்கு கிடைக்கப்பெற்றது. விவேகானந்தர் ஆசிரம வளாகத்தில் 264 வீடுகளைக் கொண்ட 23 மாடி சொகுசு அடுக்ககம் எழுப்பவும் அதில் எட்டு மாடிகள் வாகன நிறுத்துமிடம் எனவும் அறங்காவலர்க் குழு செய்த முடிவிற்கு ஒரு மனதாக ஒப்புதல் பெறப்பட்ட விவரம் அந்த ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதை அறிந்து ஆவேசம் கொண்ட அவர்கள், உடனே ஹிண்ட்ராஃப் தலைமையகத்திற்கு அந்த அறிக்கையைக் கொண்டு வந்து சேர்த்தனர்” என்றும் வேதமூர்த்தி தனது அறிக்கையில் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

waytha1சமூகக் கடப்பாட்டையும் சேவையையும் இலக்காகக் கொண்டுள்ள ஹிண்ட்ராஃப் இயக்கம் சமூகத்திற்கு எதிராக இழைக்கப்படும் இதைப் போன்ற அநீயைக் கண்டு ஒருபோதும் சகித்துக் கொள்ளாது என்றும் குறிப்பாக, ஒரு தேசிய அடையாளத்தை இழக்க ஒருக்காலும் ஒப்புக்கொள்ளாது என்றும் வேதமூர்த்தி (படம்) தெரிவித்துள்ளார்.

அவ்வாசிரம ஆண்டறிக்கைத் தகவலின்படி, விக்னேஷ் நாயுடு என்பவர் அதன் பொருளாளராக அப்போது செயல்பட்டிருக்கிறார் என்று தெரிகிறது. அதேவேளை, அந்த விவேகானந்தர் ஆசிரமத்தில் மேம்பாட்டுத் திட்டத்தை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட எஃப்3 கெப்பிட்டல் செண்டிரியான் பெர்ஹாட் என்ற நிறுவனத்தின் மேலாண்மை நிர்வாகக் குழுவிலும் அதே விக்னேஷ் நாயுடு உறுப்பினராக உள்ளார்.

பொது மக்களின் நலனுக்காகவும் ஆன்மிக சேவைக்காகவும் நிறுவப்பட்ட இந்த அமைப்பு, தன் பாதையில் இருந்தும், குறிக்கோளில் இருந்தும் விலகி, தன்னல நோக்கிற்காக குறுக்கு வழியில் செயல்படுவதை ஒருக்காலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

Hindraf-Logoஓர் அறங்காவலர் குழுவின் நிர்வாகப் பொறுப்பில் உள்ள ஒருவரே, அதன் மேம்பாட்டு நிறுவனத்தில் நிர்வாக உறுப்பினராக இடம் பெற்றிருப்பது எத்தகையத் தன்மை என்பதை பொது மக்களின் கவனத்திற்கு கொண்டு வருவதுடன் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் இதில் உடனே தலையிட வேண்டும் என்றும் ஹிண்ட்ராஃப் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.

“விவேகானந்தர் ஆசிரம அறங்காவலர்களின் சுயநல செயலையும் அரசே முன்வந்து அந்த இடத்தை பாரம்பரியச் சின்னமாக அறிவிக்க முனைந்ததை மறுத்ததையும் சமூகம் ஒருபோதும் மன்னிக்காது. தற்பொழுது, அங்கு மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ள மேம்பாட்டுப் பணியை நிறுத்த முன்வந்ததுடன் அந்த இடத்தை பாரம்பரிய மையமாக நிலைநிறுத்த ஆவன செய்யப்படும் என்றும் அறிவித்த சுற்றுலாத் துறையையும் அதன் அமைச்சரையும் ஹிண்ட்ராஃப் வரவேற்கிறது” என்றும் வேதமூர்த்தி பாராட்டியுள்ளார்.

“இப்படிப்பட்ட சூழலில், அதுவும் ஒரு பாரம்பரிய இடம் அழிக்கப்படும் மருட்டலுக்கு ஆளாகும் நிலையை உருவாக்கிய நிர்வாகக் குழுவினர்மீது உடனே ஆய்வு மேற்கொள்ளவும் மேல் நடவடிக்கை எடுக்கவும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தயங்கக்கூடாது” என்றும் வேதமூர்த்தி வேண்டுகோள் விடுத்தார்.

அதேவேளை, இந்த ஆசிரமம் தேசிய பாரம்பரியச் சின்னம் என்பதை கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டுள்ள அரசு, அந்த ஆசிரமைத்தைப் பராமரிக்கவும் மேம்படுத்தவும் சுற்றுலாத்துறை மூலம் ஐம்பது இலட்சம் ரிங்கிட் நிதியை அளிக்கும்படியும் கேட்டுக் கொள்வதாக ஹிண்ட்ராஃப் இயக்கத் தலைவர் பொ.வேதமூர்த்தி தனது அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.