Home நாடு அமரர் கவிஞர் சீனி நைனா முகம்மது அவர்களின் இலக்கண நூல்களைப் பெறும் வாய்ப்பு

அமரர் கவிஞர் சீனி நைனா முகம்மது அவர்களின் இலக்கண நூல்களைப் பெறும் வாய்ப்பு

5358
0
SHARE
Ad

Seeni Naina Mohdகோலாலம்பூர், நவம்பர் 13 – மறைந்த இறையருட்கவிஞர் செ.சீனி நைனா முகம்மது அவர்கள் சிறந்த மரபுவழி வந்த இலக்கிய இலக்கண அறிவுடையவர். தொல்காப்பியம், நன்னூல் போன்ற நூல்களில் மிகுந்த புலமையுடையவர். இன்றைய நடைமுறை இலக்கணம் பற்றியும் தேர்ந்த அறிவுடையவர்.

1997 தொடங்கி 2014 வரை, ‘உங்கள் குரல்’ மாத இதழுக்கு ஆசிரியராக இருந்து, அவ்விதழின் வழி இவர் ஆற்றிய தமிழ்ப்பணி, எண்ணி எண்ணி வியக்கத்தக்கது. மலேசிய திருநாட்டில் தொல்காப்பியச் சுடரை ஏற்றிவைத்த பெருமை ஐயா செ.சீனி நைனா முகம்மது அவர்களையே சாரும்.

விரிவான தொல்காப்பிய அறிவு

#TamilSchoolmychoice

இவரது தொல்காப்பிய அறிவை அறிந்த தமிழ்நாட்டு அறிஞர்கள், 2007ஆம் ஆண்டு, சென்னைத் தமிழ்ச்சுரங்கமும் தமிழ்ப்பண்பாட்டு மையமும் இணைந்து, தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் தலைமையில், ‘தொல்காப்பிய ஞாயிறு’ எனும் விருது வழங்கி, இவரைச் சிறப்பித்தனர்.

இலக்கணம் என்றாலே கடுமையானது என்ற எண்ணம் பரவலாக மக்கள் மத்தியில் அன்று தொடங்கி இன்று வரை இருந்துவருகிறது. ஆனால், வடக்குத் தொடங்கி தெற்கு வரை, தமிழாசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் சீனி அவர்கள் நடத்திய இலக்கண வகுப்பு, இலக்கணத்தின் மேல் மலேசியத் தமிழார்வலர்களுக்கு இருந்த அச்சத்தை நீக்கியது என்பது மறுக்கவியலாத உண்மை.

தமிழைப் படித்தோர் அனைவரும் படைப்பாளர் அல்லர். படைப்பாளர் அனைவரும் இலக்கணம் பயின்றோர் அல்லர். இலக்கணம் பயின்றோர் அனைவரும் அதனை பயிற்றுவிக்கும் திறமை கொண்டோர் அல்லர். பயிற்றுவிக்கும் திறமை கொண்டோர் அனைவரும் இலக்கண நூல் படைக்கும் ஆற்றல் பெற்றோர் அல்லர். அத்தகு ஆற்றல் பெற்றோர் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஓரிருவரே இருக்க முடியும்.

அத்தகையோருள் ஒருவராக உள்ள இந்நூலாசிரியர் பெரிதும் போற்றுதலுக்குரியவர்.

‘நல்ல தமிழ் இலக்கணம்’ – ‘புதிய தமிழ்ப்புணர்ச்சி விதிகள்’

Untitled

செ. சீனி நைனா முகம்மது அவர்கள், நல்ல தமிழ் இலக்கணம், புதிய தமிழ்ப்புணர்ச்சி விதிகள் எனும் இரண்டு தரமான இலக்கண நூல்களைத் தமிழ்க்கூறு நல்லுலகத்திற்கு வழங்கியுள்ளார்.

நல்ல தமிழ் இலக்கணம், புதிய தமிழ்ப்புணர்ச்சி விதிகள் எனும் செ.சீனி நைனா முகம்மது அவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த இந்த இரண்டு நூல்களும் தமிழ் கூறு நல்லுலகத்திற்குக் கிடைத்த அரிய நூல்களாகும்.

நல்ல தமிழ் இலக்கணம் எனும் நூல், தமிழ் இலக்கணத்தைக் கற்று தங்கள் மொழியறிவை வளர்த்துக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் ஏற்ற வகையில், இலக்கணக் கூறுகளை எல்லாம் உள்ளடக்கி மிக எளிமையான முறையில் அமைக்கப்பட்டுள்ளது. இன்று சந்தையில் காணப்படும் இலக்கண நூல்களை ஆராய்ந்தால் அனைத்து நூல்களிலும் திரும்ப திரும்ப ஒரே மாதிரியான எடுத்துக்காட்டுகளே இருப்பதைக் காணலாம்.

இன்றைய மாணவர்களுக்கு இலக்கணத்தில் ஈடுபாடின்மைக்குப் புதுமையாய்க் கற்பிக்காததும் ஒரு காரணம் எனலாம். ஆனால், செ. சீனி நைனா முகம்மது அவர்களின் இந்நூல் இதற்கு விதிவிலக்காய் அமைந்துள்ளது. தொல்காப்பியத்திலும் நன்னூலிலும் உள்ள செய்திகளை, இக்கால மாணவர் எளிதாகப் பயிலுமாறு மறுபடைப்புச் செய்திருக்கிறார்.

அடுத்து, புதிய தமிழ்ப்புணர்ச்சி விதிகள் எனும் நூல். இந்நூல் சீனி அவர்களின் இலக்கணப்புலமைக்கும் தனித்திறப் பார்வைக்கும் சான்றாய் மிளிர்வதைக் கண்டு மகிழலாம்.

Untitled1

எழுத்தின் உட்கூறாகிய புணர்ச்சியை, இத்துணை எளிமையாகத் தமிழுலகத்திற்கு இதுவரை யாரும் கொடுத்ததாகச் சான்றுகள் இல்லை. மூல இலக்கண நூலான தொல்காப்பிய நூலின் உரைகளையே பலரும் ஆராய்ந்து வந்த வேளையில், நேரடியாக தொல்காப்பிய நூற்பாக்களை 40 ஆண்டுகளாக ஆராய்ந்து வந்ததின் பயனாக, சொற்புணர்ச்சி இலக்கணத்தின் பின்புலமான காரணங்களையும் கோட்பாடுகளையும் கண்டு தெளிவு பெற்றார் கவிஞர்.

கிடைத்த தெளிவின் அடிப்படையில் புணர்ச்சி விதிகளை எளியனவாகவும் இக்காலத்துக்கு ஏற்றனவாகவும் மறுசீரமைத்துத் தந்துள்ளார். தமிழ்ச் சொற்புணர்ச்சி இலக்கணத்தைப் பெருந்தொல்லையாகக் கருதும் சிலர், மற்ற மொழிகளில் இதுபோன்ற தொல்லை இல்லை என்று எண்ணுகின்றனர். அவர்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் பிறமொழிகளில் காணப்படும் சொற்புணர்ச்சி முறைகளை இந்நூலில் எடுத்துக்காட்டியுள்ளார்.

மேலும், சொற்புணர்ச்சிக்கான காரணங்களையும் முறைகளையும் விளக்கியுள்ளார். இதுவரை தமிழ்நாட்டில் வெளிவந்துள்ள வேறு எந்த இலக்கண நூலிலும் இதுபோன்ற விளக்கங்களை நாம் காணயியலாது என்று உறுதியாகக் கூறலாம்.

புணர்ச்சி முறைகளை விளக்கப் பயன்படுத்தப்பட்டுள்ள எடுத்துக்காட்டுகள் பெரும்பாலும் நடைமுறை வழக்கிலுள்ள எடுத்துக்காட்டுகளே என்பது இந்நூலின் தனிச்சிறப்பு. மேலும், காலந்தோறும் கடுமையான ஒன்றாகச் சித்தரிக்கப்பட்ட புணரியல் இலக்கண விதிகளை, மரபு மீறாமல் ஓர் எளிய கட்டமைக்குள் கொண்டுவந்து தந்த பெருமை ஐயா சீனி நைனா முகம்மது அவர்களையே சாரும்.

இந்நூலைப் பயில்வோருக்கு, புணர்ச்சி இலக்கணத்தில் இதுவரை உள்ள அத்துணைக் குழப்பங்களுக்கும் விடை கிடைக்கும் என்பது மறுக்கவியலாத உண்மை.

பழங்கால இலக்கண ஆசிரியர்கள் பலரும் துறவிகளாக இருந்து தம் துறவின் தலைசிறந்த கடமையாக இலக்கண நூல் எழுதுவதைத் தவம் போல மேற்கொண்டு அதைச் சாதித்திருக்கிறார்கள். அவர்களுக்கு உதவ வள்ளல்கள் இருந்திருக்கிறார்கள்.

இன்று இலக்கண ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்கள் குறைந்து விட்டனர். இலக்கணத்தைக் கற்பது, அதில் ஆராய்ச்சி செய்வது என்பது ஒரு சிலருக்கே கிடைத்த பேறாக இருக்கிறது. அதற்குப் பலமொழிப்பயிற்சி, மொழியியல் பயிற்சி போன்றவையும் தேவைப்படுகின்றன. இவை எல்லாம் பார்க்கும்போது இறையருட்கவிஞர் சீனி அவர்கள் எத்தகையவர் அவர் பணி எத்தகைய சிறப்புடையது என்பது விளங்கும்.

தம் வாழ்நாள் முழுமையும் இலக்கண ஆராய்ச்சியில் திளைத்து அதில் இன்பம் கண்டு தாம் கண்டதைத் தமிழ் உலகுக்கு அறிவிக்க நினைத்து இவ்விலக்கண நூல்களை யாத்து அச்சிட்டுத் தருவது அவரது சான்றாண்மையையும் ஒப்புரவையும் காட்டுகிறது. கைம்மாறு கருதாத அவர் பணிக்குத் தமிழுலகம் கடப்பாடுடையது.

செ.சீனி நைனா முகம்மதுவின் இவ்வரிய இலக்கண நூல்களை ஏற்றுப்போற்றுவது நமது கடமை. அதுவே நாம் அவருக்குச் செய்யும் கைம்மாறு.

இந்த இரண்டு நூல்களின் மொத்த விலை 40 ரிங்கிட் ஆகும். இந்த நூல்களைப் பெற  011-33223179 என்ற செல்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.