இஸ்லாமாபாத், மார்ச் 4 – சவுதி அரேபியா நாட்டின் மன்னர் சல்மானின் அழைப்பை ஏற்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் இன்று (4-ம் தேதி) ரியாத் செல்கிறார்.
6-ஆம் தேதி வரை சவுதியில் தங்கியிருக்கும் அவர் மன்னர் சல்மானுடன் சவுதி-பாகிஸ்தான் இடையிலான உறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
நவாஸ் ஷெரிப்புடன் பாகிஸ்தான் நிதியமைச்சர் இஷாக் டர், பஞ்சாப் மாகாண முதல்வர் ஷாபாஸ் ஷெரிப், பிரதமரின் தனி ஆலோசகர்கள் இர்பான் சித்திக்கி, சையத் தாரிக் ஃபதேமி மற்றும் அரசின் உயரதிகாரிகள் அடங்கிய குழுவினரும் செல்கின்றனர்.
இந்த பயணத்தின்போது மக்காவில் உள்ள முக்கரம்மாவில் உம்ரா செய்யும் நவாஸ், மதீனாவில் உள்ள மஸ்ஜித்-இ-நப்வியில் தொழுகை நடத்துவார் என பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவில் சுமார் 17 லட்சம் பாகிஸ்தானியர்கள் பணியாற்றி வருகின்றனர். இரு நாடுகளுக்கும் இடையிலான வணிகத் தொடர்புகள் ஆண்டொன்றுக்கு சுமார் 4.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற அளவை எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.