நியூ யார்க், ஏப்ரல் 9 – அமெரிக்காவில் கறுப்பினத்தவர் மீதான அடக்குமுறைகள் மீண்டும் தலை தூக்கத் தொடங்கி உள்ளன. கடந்த வருடம் முதல் கறுப்பினத்தவர் மீதான தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் காவல் துறை அதிகாரியால் கறுப்பினத்தவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
தெற்கு கரோலினாவில் உள்ள வடக்கு சார்லஸ்டன் பகுதியில் வால்டர் ஸ்காட்(50) என்ற கறுப்பினத்தவரை, ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த மைக்கேல் ஸ்லேகர் என்ற காவல் துறை அதிகாரி தடுத்து நிறுத்தினார். அவரை கைது செய்வதாக அதிகாரி கூறிய நிலையில், அவரிடம் இருந்து ஸ்காட் தப்பித்து ஓட முற்பட்டார். அப்பொழுது ஸ்காட்டை காவல் துறை அதிகாரி சரமாரியாக சுட்டு வீழ்த்தினார். இதில் சம்பவ இடத்திலேயே வால்டர் ஸ்காட் பலியானார். முன்னாள் கடற்படை காவலரான வால்டர், தன்னை தாக்க முற்பட்டதால் தற்காப்புக்காக அவரை சுட்டுக்கொன்றதாக மைக்கேல் தனது மேல் அதிகாரிகளிடம் கூறியிருந்தார்.
ஆனால், சம்பவ இடத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை, அங்கிருந்த ஒருவர் தனது கேமரா மூலம் பதிவு செய்து நியூயார்க் டைம்ஸ் இதழுக்கு அனுப்பினார். அந்த பதிவில் இருவருக்குமிடையே எந்த வித உரையாடலும் இடம்பெறவில்லை. வால்டர் தப்பி ஓட முயற்சித்த பொழுது காவல் துறை அதிகாரி வால்டரின் முதுகில் 5 முறை சுட்டார். மேலும் அவர் வீழ்ந்து கிடந்த வால்டரை 30 அடி தூரம் வரை இழுத்துச் சென்றதும் அந்த கேமராவில் பதிவாகி உள்ளது.
இதற்கிடையே காவல் துறை அதிகாரி திட்டமிட்டு ஸ்காட்டை கொன்றது விசாரணையில் உறுதி படுத்தப்பட்டதால், அவர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.
கறுப்பினத்தவரை கண்மூடித்தனமாக சுடும் காவல் துறை அதிகாரியின் காணொளி:
https://www.youtube.com/watch?v=kXO3Ix_GIyI