கோலாலம்பூர், ஏப்ரல் 16 – “மஇகா-வை பழனிவேல் அழித்துவிட்டார் !” என அக்கட்சியின் முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ உத்தாமா சாமிவேலு இன்று பகிரங்கமாக தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
இன்று புத்ரா உலக வர்த்தக மையத்தில் நடைபெற்ற 11 வது மலேசியன் திட்டம் மற்றும் இந்திய சமுதாயம் என்ற கருத்தரங்கில் பேசிய சாமிவேலு, “நான் அவரைப் (பழனிவேல்) பாராட்டியே ஆக வேண்டும். ஏனென்றால் யாராலும் அழிக்க முடியாத கட்சியாக மஇகா திகழ்ந்தது. ஆனால் அவர் பதவி வகித்து அழித்துவிட்டார்” என்று கூறியதாக மலேசியாகினி தெரிவித்துள்ளது.
மேலும், “இந்திய சமுதாயத்திற்காக பிரதிநிதித்த கட்சியை அவர் கொன்றுவிட்டார். இந்தியர்களுக்காக செயல்பட்ட ஒரு கட்சியை கொன்றுவிட்டார். இந்தியர்களுக்காக பல விசயங்களைக் கொண்டு வந்த கட்சியை கொன்றுவிட்டார்” என்றும் சாமிவேலு கூறியுள்ளார்.
“பழனிவேல் என்னுடைய முன்னாள் பத்திரிகை செயலாளர் தான். நான் பயிற்சி அளித்தேன். ஆனால் அவர் என்னிடமிருந்து எதையும் கற்றுக் கொள்ளவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “மஇகா தனது பலத்தை இழந்துவிட்டது. இந்திய சமுதாயம் மஇகா-வை நம்பியிருந்த காலங்களும் கடந்துவிட்டன.” என்றும் சாமிவேலு குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, மஇகா துணைத்தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியத்தை ஆதரித்தும் சாமிவேலு கருத்துத் தெரிவித்துள்ளார்.
“பழனிவேலை விட சுப்ரமணியம் 100 மடங்கு சிறந்தவர். அவரால் இந்திய மக்களின் பிரச்சனைகளைப் புரிந்து கொள்ள முடிகின்றது. அவர்களின் வலி என்னவென்று அவரால் உணர முடிகின்றது. அவர்களின் பிரச்சனைகளைத் தீர்க்க அவரிடம் திட்டங்கள் உள்ளன” என்றும் சாமிவேலு தெரிவித்துள்ளார்.