ஹைதராபாத், ஜூலை 10- ஹாலிவுட் தரத்திற்கு இணையாகத் தயாராகி உள்ள ‘பாகுபலி’ திரைப்படத்தைக் காண வசதியாகக் கல்லூரிக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என மாணவர்கள் கல்லூரி முதல்வருக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.
நேற்று உலகெங்கும் வெளியானது ‘பாகுபலி’. இத்திரைப்படத்தைக் காண ரசிகர்கள் மத்தியில் பலத்த போட்டி நிலவுகிறது. குறிப்பாக ஆந்திரா, தெலுங்கானா கல்லூரி மாணவர்கள் முதல் நாளன்றே படத்தைப் பார்த்துவிட வேண்டும் என்பதில் குறியாக இருந்தனர்.
இந்நிலையில் இத்திரைப்படத்தை முதல் நாளே காண்பதற்கு வசதியாகத் தங்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என ஹைதராபாத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள், கல்லூரி முதல்வருக்குக் கோரிக்கைக் கடிதம் எழுதிய தகவல் வெளியாகியுள்ளது.
அதில், “ஐயா, 10ஆம் தேதி ‘பாகுபலி’ வெளியாவதால், கல்லூரிக்கு அதிகாரப்பூர்வ விடுமுறை அறிவிக்க வேண்டுகிறோம். எப்படி இருந்தாலும் வெள்ளிக்கிழமை நாங்கள் கல்லூரிக்கு வர மாட்டோம். எனவே எங்களைச் செல்பேசியில் தொடர்பு கொள்ளவோ, குறுந்தகவல் அனுப்பவோ வேண்டாம். இப்படிக்கு, தங்கள் கீழ்ப்படிந்த பிரபாஸ் ரசிகர்கள் மற்றும் ராஜமெளலி ரசிகர்கள்” என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்த நையாண்டியின் உச்சமாகத் தங்களிடம் கூடுதலாக ஒரு டிக்கெட் இருப்பதாகவும், விருப்பம் இருப்பின் கல்லூரி முதல்வரும் தங்களுடன் சேர்ந்து திரையரங்கில் படம் பார்க்க வரலாம் என்றும் மாணவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
சமூக ஊடகங்களில் வெளியான மாணவர்கள் கடிதம் வைரலாகப் பரவி வருகிறது.