சென்னை, ஜூலை 11- ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ராணா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், நாசர் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளங்களின் நடிப்பில், பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு,மிகப் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்ற படம் ‘பாகுபலி’.
வெளியானதிலிருந்து உலகம் முழுவதும் இதே பேச்சு!
படம் பார்த்த எல்லோரும் பாகுபலியை வானளாவப் புகழ்ந்து வருகிறார்கள்.
இந்நிலையில்,இயக்குநர் ராம் கோபால் வர்மா, பாகுபலி படம் குறித்து தனது டுவிட்டரில் சில கருத்துகளைப் பதிவு செய்துள்ளார்.
அவர் தெரிவித்திருக்கும் கருத்துகள் இதோ:
“முதல் முறையாக நடிகர் பிரபாஸைக் காட்டிலும் அவரது படம் பெரிய அளவில் பேசப்படுகிறது.
அனைத்து நடிகர்களும் தங்களைத் தாங்களே பெரிய நடிகர்களாக நிரூபித்துக் கொள்ள பாகுபலி, எச்சரிக்கை மணி அடித்துள்ளது.
சினிமா உலகத்தில் சிங்கங்கள், புலிகள், அனகோண்டா, யானைகள் எனப் பல மிருகங்கள் இருப்பினும் ‘பாகுபலி’ என்ற ஒற்றை டைனோசரஸ் வெளியாகி, உயிர் பிழைக்கும் முறையையே மாற்றியமைத்து விட்டது.
மற்ற இயக்குநர்கள் பொறாமையிலேயே உங்களை விழுங்கப் போகிறார்கள் ராஜமௌலி.
அடுத்த படம் கொடுக்க நான்கு வருடங்கள் எடுத்துக் கொண்டால் கண்டிப்பாகச் சினிமா உலகில் நல்ல படமே இல்லாமல் போய்விடும்”
இக்கருத்துகளால் பல பெரிய நடிகர்களையும் ,இயக்குநர்களையும் சீண்டி விட்டுள்ளார் இயக்குநர் ராம் கோபால் வர்மா எனப் பலர் சர்ச்சையைக் கிளப்ப ஆரம்பித்துள்ளனர்.
இதற்கு முன்பு ’ஓ காதல் கண்மணி’ படம் பார்த்துவிட்டு, மம்முட்டியையும் துல்கரையும் ஒப்பிட்டுப் பேசி துல்கரிடம் அமைதியான முறையில் வாங்கிக் கட்டிக் கொண்டார் ராம்கோபால் வர்மா என்பது குறிப்பிடத்தக்கது.