கோலாலம்பூர், ஜூலை 14 – கடந்த ஜூலை 10, 11, 12 ஆம் தேதிகளில் மூன்று நாட்களாக நடந்து முடிந்த மஇகா கிளைகளுக்கான வேட்புமனுத் தாக்கல்களில் சில நியாயமான காரணங்களுக்காக பங்குபெற முடியாத கிளைகளுக்கு மறு வாய்ப்பு வழங்கப்படலாம் என மஇகா தலைமையகம் முடிவு செய்துள்ளதாக மஇகா தலைமைச் செயலாளர் அ.சக்திவேல் அறிவித்துள்ளார்.
“கிளைகளுக்கான வேட்பாளர் மனுப் பாரங்கள் உரிய காலத்தில் கிடைக்கவில்லை, சம்பந்தப்பட்ட ஆவணங்கள் அஞ்சல் சேவை தாமதத்தினால் காலத்தோடு கிடைக்கவில்லை, தொலைந்து விட்டன என்பது போன்ற பல்வகைப் பட்ட புகார்களை கிளைப் பொறுப்பாளர்களிடமிருந்து மஇகா தலைமையகம் பெற்று வருகின்றது. இதனைத் தொடர்ந்து மஇகா இடைக்காலத் தேசியத் தலைவரான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் தலைமையிலான மஇகா தலைமையக நிர்வாகம் நடந்து முடிந்த வேட்புமனுத் தாக்கல் தொடர்பான புகார்கள் இருப்பின் அவற்றை கிளைப் பொறுப்பாளர்கள் எதிர்வரும் 19 ஜூலை 2015க்குள் மஇகா தலைமையகத்தில் சமர்ப்பித்துவிட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளது” எனவும் சக்திவேல் பத்திரிக்கைகளுக்கு விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.
“பெறப்படும் புகார்களில் நியாயம் இருந்தால், அவை முறையாக இருந்தால், இது தொடர்பாக முறையாக விசாரித்து மஇகா தலைமையகம் நியாயமாக முடிவெடுக்கும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எல்லா மஇகா கிளைகளுக்கும் நியாயமான, பாரபட்சம் இல்லாத வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், எந்தவித அரசியல் காரணங்களுக்காகவும் எந்த ஒரு மஇகா கிளையும் புறக்கணிக்கப்படாது என்றும் உறுதியளிப்பதாகவும் சக்திவேல் மேலும் கூறியுள்ளார்.