கோலாலம்பூர், ஜூலை 15 – லோ யாட் மோதல் சம்பவம் இந்தளவு பெரிதாகும் என அது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் எதிர்பார்க்கவில்லை என அவர்களின் வழக்கறிஞர் முகமட் கைருல் அசாம் அப்துல் அசிஸ் தெரிவித்தார்.
“கைது செய்யப்பட்டவர்கள் எந்தவொரு அமைப்பையும் சேர்ந்தவர்கள் அல்ல. அவர்கள் அவ்வப்போது தவறுகள் செய்யக்கூடிய சாதாரண இளைஞர்கள், அவ்வளவுதான்” என்று முகமட் கைருல் கூறினார்.
இச்சம்பவத்தின் போது நிகழ்ந்தவை என காவல்துறை விவரித்துள்ளவை தவறாக உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தனது கட்சிக்காரர்கள் மீது ஐஜிபி டான்ஸ்ரீ் காலிட் அபுபாக்கர் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் மிகத் தீவிரமானவை என்றார்.
“லோ யாட் வணிக வளாகத்தின் மேல் தளத்திற்கு இருவர் சென்றதாகக் கூறப்படுவது சரியல்ல. ஒருவர் மட்டுமே சென்றார். மற்ற அனைவரும் கீழேதான் நின்றிருந்தனர். அதேபோல் எனது கட்சிக்காரர் தனக்கு போலியான கைபேசி தரப்பட்டதாக அந்த வளாகத்தைச் சுற்றி வந்து வதந்திகளை பரப்பினார் என்பதும் உண்மையல்ல,” என்றார் முகமட் கைருல்.
கடந்த சனிக்கிழமையன்று மாலை 5.40 மணியளவில் ஆடவர் ஒருவர் லோ யாட் வளாகத்தில் உள்ள கடையில் இருந்து திறன்பேசி ஒன்றை திருட முயன்றபோது பிடிபட்டதாக அந்த வணிக வளாகத்தின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து மூண்ட கலவரம் தொடர்பாக இதுவரை 22 பேர் கைதாகியுள்ளனர்.