புதுடில்லி, ஜூலை 16- நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு அரசியல் காரணங்களுக்காக முட்டுக்கட்டை போடாதீர்கள். அதனால் கிராமப்புற வளர்ச்சி மி கவும் பாதிக்கும்” என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மத்திய திட்டக்குழுவுக்கு மாற்றாகக் கொண்டு வரப்பட்டுள்ள நிதி ஆயோக் அமைப்பின் ஆட்சிமன்றக் குழுக் கூட்டம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசியதாவது:
“நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு அரசியல் காரணங்களுக்காக முட்டுக்கட்டை போட வேண்டாம். இந்த மசோதா நிறைவேறாவிட்டால் கிராமப்புற வளர்ச்சி கடுமையாகப் பாதிக்கப்படும். விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொள்ள வேண்டும். இந்த மசோதா விசயத்தில் எல்லா மாநில அரசுகளும் மத்திய அரசும் ஒற்றுமையாக இருந்து வறுமை ஒழிப்புக்குப் பாடுபட வேண்டும்.
நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு அரசியல் கட்சிகளின் எதிர்ப்பால், கிராமப்புறங்களில் புதிதாகப் பள்ளிகள், மருத்துவ மனைகள், சாலைகள், நீர்ப் பாசனத் திட்டங்கள் போன்ற எதையும் செயல்படுத்த முடியவில்லை.
நிலம் கையகப்படுத்தும்போது விவசாயிகளுக்கு அதிக இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்பதில் மத்திய – மாநில அரசுகளுக்குள் கருத்து வேறுபாடு எதுவும் இல்லை. விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் செயல்பாடுகளிலும், கிராமத்தை மேம்பயத்தும்நடவடிக்கைகளிலும் அரசியல் நுழைந்துவிடக் கூடாது.
இந்த மசோதா நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் ஆய்வில் உள்ளது. மாநில அரசுகள் தெரி வித்த யோசனைகளை நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்க உள்ள இந்த நேரத்தில் மறுபடியும் பரிசீலிப்பது சரியாக இருக்கும்.” என்றார் அவர்.