சிங்கப்பூர், ஜூலை 28 – நேற்று இரவு காலமான இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமிற்கு, சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து லீ தனது பேஸ்ப்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலில், “இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அவுல் பகீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாமின் மறைவை அறிந்து மிகவும் வருந்துகிறேன்.”
“டாக்டர் கலாம் எளியவராக தனது வாழ்க்கையைத் தொடங்கி, பின்னர் இந்தியாவின் தற்காப்பு ஆராய்ச்சிக் கழகத்தில் தலைமை விஞ்ஞானியாக உயர்வு பெற்று, கடந்த 2002 முதல் 2007-ம் ஆண்டு வரையில் நாட்டின் 11-வது அதிபராகவும் (குடியரசுத்தலைவர்) சேவையாற்றி, என்றும் ‘மக்களின் தலைவராகவே’ வாழ்ந்தவர்.”
“அப்படிப்பட்ட கண்ணியமான மனிதர் கடந்த 2006-ம் ஆண்டு சிங்கப்பூர் வந்த போது, அவரைச் சந்தித்தேன். அன்னாரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், இந்திய மக்களுக்கும் எங்களின் ஆழ்ந்த இரங்கல்கள்” என்று லீ சியான் லூங் தெரிவித்துள்ளார்.