கோலாலம்பூர் – பாலர் பள்ளி ஆசிரியை இந்திரா காந்தியின் பிள்ளைகள் மதமாற்றம் செய்யப்பட்ட வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து, தனது வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துத் தெரிவித்த முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சைட் இப்ராகிம் இன்று காவல்துறையால் விசாரணை செய்யப்பட்டார்.
தேசநிந்தனைச் சட்டம் பிரிவு 4(1)-ன் கீழ் அவர் விசாரணை செய்யப்பட்டார்.
டாங் வாங்கி காவல்துறைத் தலைமையகத்தில் இன்று மூன்று வழக்கறிஞர்களுக்கு மத்தியில் சுமார் இரண்டு மணி நேரங்களுக்கு காவல்துறையின் கேள்விகளுக்கு சைட் பதிலளித்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சைட், “நான் எழுதியது குறித்து சிலர் மிகவும் அதிருப்தி அடைந்திருக்கலாம். என்னுடைய செயலுக்காக நான் விசாரிக்கப்பட்டேன். இந்திரா காந்தியின் வழக்கில் என்னுடைய நிலைப்பாட்டை எனது வலைத்தளத்தில் எழுதினேன்” என்று சைட் தெரிவித்துள்ளார்.
இந்திரா காந்தி வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் இதயமற்றவர்கள் என்ற அர்த்தத்தில் அண்மையில் தனது வலைத்தளத்தில் சைட் கருத்துத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.