Home Featured நாடு “அச்சம் வேண்டாம்; பத்துமலையில் உச்சக்கட்ட பாதுகாப்பு” – காவல்துறை உறுதி!

“அச்சம் வேண்டாம்; பத்துமலையில் உச்சக்கட்ட பாதுகாப்பு” – காவல்துறை உறுதி!

477
0
SHARE
Ad

BatuCavesகோலாலம்பூர் – இந்த வார இறுதியில் பத்துமலையில் நடைபெறவிருக்கும் தைப்பூசத் திருவிழாவில் எந்த ஒரு அசம்பாவிதங்களும் ஏற்படாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக உள்ளதாக சிலாங்கூர் காவல்துறை இன்று உறுதியளித்துள்ளது.

இது குறித்து சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் அப்துல் சமா மாட் கூறுகையில், கடந்த ஜனவரி 15-ம் தேதி முதல், பத்துமலை ஸ்ரீ சுப்ரமணியர் சுவாமி ஆலயத்தில் காவல்துறை தீவிரப் பாதுகாப்பில் ஈடுபட்டு வருவதாகவும், 24-ம் தேதி வரையில் இந்தப் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.

எனவே பொதுமக்கள் இது குறித்து எந்த ஒரு அச்சமும் அடையத் தேவையில்லை என்றும் சமா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

கடந்த வாரம் இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் நடந்த தீவிரவாதத் தாக்குதலை அடுத்து, அண்டை நாடுகளான மலேசியா, சிங்கப்பூர் ஆகியவற்றில் பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகின்றது.

அதற்கு ஏற்றார் போல், கோலாலம்பூரில் ஐஎஸ் தொடர்புடைய நபர் கைது செய்யப்பட்டதோடு, நகரின் முக்கியப் பகுதிகளில் தற்கொலைத் தாக்குதல் நடத்த அந்நபர் திட்டமிட்டிருந்ததும் கண்டறியப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, மலேசியர்கள் இந்த வார இறுதியில் பத்துமலையில் நடைபெறவுள்ள தைப்பூசத் திருவிழாவில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்து விடக் கூடாது என அஞ்சி வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக, பேஸ்புக்கில் புகைப்படம் ஒன்று பரவி வருகின்றது. பத்துமலைக்கு வருகை புரிந்த சில வெளிநாட்டினர்களின் புகைப்படங்களைப் பதிவு செய்த சில தரப்பினர் அவர்கள் யார்? என்று சந்தேகப் பார்வையில் கேள்வி எழுப்பினர்.

எனினும், நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். வீண் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என காவல்துறை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது.

இதனிடையே, தைப்பூச தினத்தன்று சுமார் 1.6 மில்லியன் பக்தர்கள் பத்துமலைக்கு வருகை புரிவார்கள் என எதிர்பார்ப்பு நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.