புதுடெல்லி,மார்ச்.15 – இத்தாலி மாலுமிகள் விவகாரம் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் நேற்று சந்தித்து பேசினார்.
அப்போது மாலுமிகள் விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து அவர்கள் விவாதித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
கேரள கடற்கடல் பகுதியில் மீன்படித்துக்கொண்டியிருந்த கேரள மீனவர்கள் மீது அந்த வழியாக வந்த இத்தாலி நாட்டு மாலுமிகள் துப்பாக்கியால் சுட்டதில் 2 பேர் பலியானார்கள்.
இது தொடர்பாக இத்தாலி மாலுமிகள் மாஸ்சி மிலியானோ லாட்டோரே மற்றும் சல்வாட்டோராகிரோனே ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் இருவரும் இத்தாலி தேர்தலில் ஓட்டுப்போடுவதற்காக அங்கு உத்தரவாதத்துடன் சென்றனர். அங்கு சென்ற பின்பு இந்தியாவுக்கு விசாரணைக்கு வர மறுத்துவிட்டனர்.
அவர்களை இந்தியாவுக்கு அனுப்ப இத்தாலி அரசும் மறுத்துவிட்டது. இதனால் இந்தியா-இத்தாலி இடையே உறவு பாதிக்கும் நிலை ஏற்பட்டது.
மாலுமிகளை திருப்பி அனுப்பாவிட்டால் கடும் விளைவுகள் ஏற்படும் என்று இத்தாலிக்கு பிரதமர் மன்மோகன் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் இத்தாலி நாட்டு தூதர் நாட்டை விட்டு வெளியே சுப்ரீம்கோர்ட்டு தடைவிதித்துள்ளது.
இந்த நிலையில் பிரதமர் மன்மோகன் சிங்கை அமைச்சர் சல்மான் குர்ஷித் நேற்று சந்தித்து பேசினார். அப்போது மாலுமிகளை இந்தியாவுக்கு கொண்டுவருவது குறித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து விவாதித்ததாக தெரிகிறது.