கோலாலம்பூர் – பிரிட்டிஷ் பத்திரிக்கையாளர் எலியாட் ஹிக்கின்சால் நிறுவப்பட்ட இணைய விசாரணைக் குழுவான பெலிங்கேட் டீம் (Bellingcat Team), “எம்எச்17 – முக்கிய சந்தேகநபர்கள் மற்றும் 53-வது விமான ஏவுகணை எதிர்ப்புப் படை” என்ற தலைப்பில் 115 பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையை எம்எச்17 டச்சு விசாரணைக் குழுவிடமும் சமர்ப்பித்துள்ளது.
எம்எச்17 விமானத்தை வீழ்த்தியது ரஷிய தயாரிப்பு பக் ஏவுகணை தான் என கடந்த ஆண்டு டச்சு அறிக்கை ஒன்று கூறியது.
அதனை அடுத்து பெலிங்கேட் நடத்திய விசாரணையின் அடிப்படையில் வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைனுக்கு பக் ஏவுகணையை அனுப்பி வைக்கும் முடிவை ரஷிய தற்காப்பு அமைச்சின் தலைமை அதிகாரிகள் வெளிப்படையாக எடுக்கவில்லை. வான் தற்காப்புப் படையில் இருந்து உக்ரைனுக்கு இராணுவ உபகரணங்களை அனுப்பி வைக்கும் அந்த முடிவை ரஷிய தற்காப்பு அமைச்சின் மிக உயர் அதிகாரிகள் தான் எடுத்துள்ளனர். எனவே எம்எச்17 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு ரஷிய தற்காப்பு அமைச்சு தான் முழு பொறுப்பு எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
ஆகவே, கடந்த 2014-ம் ஆண்டு ஜூலை 17-ம் தேதி, மலேசிய ஏர்லைன்ஸ் எம்எச்17 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்குப் பின்புலமாக ரஷிய இராணுவ வீரர்கள் இருக்கலாம் என பெலிங்கேட் குழு சந்தேகிக்கின்றது.
ஆம்ஸ்டெர்டாமில் இருந்து கோலாலம்பூர் நோக்கி வந்த அந்த விமானத்தில் 298 பேர் இருந்தனர். அவர்கள் அனைவரும் இந்தப் பேரிடரில் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.