சென்னை – தமிழகத் தேர்தலில் நட்சத்திரத் தொகுதிகள் வரிசையில் மூன்றாவதாக நாம் பார்ப்பது உளுந்தூர் பேட்டை. மூன்றாவது பெரிய அணியாக உருவெடுத்திருக்கும் தேமுதிக-மக்கள் நலக் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் விஜயகாந்த் போட்டியிடுவதால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள தொகுதி உளுந்தூர்ப் பேட்டை.
இவரை எதிர்த்து நிற்பவர்களில் முக்கிய வேட்பாளராகப் பார்க்கப்படுபவர் பாமக சார்பில் போட்டியிடும் வழக்கறிஞர் பாலு. தமிழக செய்தித் தொலைக்காட்சிகளில் அடிக்கடி நடைபெறும் விவாதங்களில் பாமக சார்பில் கலந்து கொண்டு, தனது வழக்கறிஞர் தொழில் திறமையால், வலுவான பல அரசியல் வாதத் திறமைகளை முன்னெடுத்து வைப்பவர் பாலு.
இருப்பினும் இந்தத் தொகுதியில் அதிமுக-திமுக இரண்டும் பலமான போட்டியைத் தந்து கொண்டிருப்பதாக தமிழகத் தகவல் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
உளுந்தூர் பேட்டை விஜய்காந்துக்குப் புதிய தொகுதி
2006ஆம் ஆண்டுத் தேர்தலில் விருத்தாசலம் தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிட்டு வென்ற விஜய்காந்த், 2011இல் தொகுதி மாறினார். ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். இந்த முறை உளுந்தூர் பேட்டைக்கு மாறியுள்ளார்.
அவரது கட்சி அமைப்பு ரீதியாக வலுவுடன் செயல்படும் தொகுதி என்பதாலும், இங்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஆதரவு அதிகம் இருப்பதாகக் கருதப்படுவதாலும், விஜய்காந்த் இங்கு போட்டியிடுவதாகக் கூறப்படுகின்றது.
ஆர்.குமரகுரு – உளுந்தூர் பேட்டை அதிமுக வேட்பாளர்
இவரை எதிர்த்து அதிமுக சார்பில் நடப்பு சட்டமன்ற உறுப்பினர் ஆர்.குமரகுரு (படம்) போட்டியிடுகின்றார். இவர் நடப்பு சட்டமன்ற உறுப்பினராகவும் இருப்பதால் இவருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக சில கணிப்புகள் கூறுகின்றன. அதிமுகவின் வாக்கு வங்கி பலமும், இரட்டை இலை சின்னமும் இவருக்கு கூடுதல் வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தித் தரலாம்.
2011 தேர்தலில் 53,508 வாக்குகள் வித்தியாசத்தில் இந்தத் தொகுதியைக் கைப்பற்றியவர் குமரகுரு.
திமுக வேட்பாளராக உளுந்தூர் பேட்டையில் நிறுத்தப்பட்டிருப்பவர் ஜிஆர்.வசந்தவேலு. இவரும் திமுகவின் கணிசமான வாக்கு வங்கியைப் பெறுவார் எனக் கருதப்படுகின்றது.
இந்நிலையில், விஜய்காந்தின் சினிமா பிரபல்யம் இந்தத் தொகுதியில் வெல்லுமா அல்லது கடுமையான போட்டியில் அவர் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைவாரா என்பதைக் காண தமிழகம் ஆவலுடன் காத்திருக்கின்றது.
-செல்லியல் தொகுப்பு