Home Featured நாடு மரணப் பிடியில் 66 நாட்கள்: அனுபவித்த சித்திரவதைகள் விவரிக்கும் 4 சரவாக் மாலுமிகள்!

மரணப் பிடியில் 66 நாட்கள்: அனுபவித்த சித்திரவதைகள் விவரிக்கும் 4 சரவாக் மாலுமிகள்!

637
0
SHARE
Ad

Sarawak hostagesசிபு – பட்டினி கிடக்க வேண்டும், வெடிகுண்டுகளிலிருந்து தப்பிக்க காட்டுக்குள் ஓட வேண்டும், கொசுக்கடி, தேள் கடிகளைத் தாங்க வேண்டும் இப்படியாகப் பல நாட்கள் படு பயங்கரமான துன்பங்களைத் தாண்டி, தப்பிப் பிழைத்து வந்திருக்கிறார்கள் அபு சயாப்பின் மரணப் பிடியிலிருந்து விடுவிக்கப்பபட்ட அந்த 4 சரவாக் மாலுமிகள்.

கடந்த ஏப்ரல் 1 -ம் ஆம் தேதி, தங்களது படகில் சரவாக் திரும்பிக் கொண்டிருந்த தெக் காங், அவரது சகோதரர் தெக் சி, அவரது உறவினர் லாவ் ஜங் ஹெயின், வோங் ஹங் சிங் ஆகிய நால்வரையும், ஆயுதமேந்திய அபு சயாப் தீவிரவாத இயக்கத்தினர் கடத்திச் சென்றனர்.

இரண்டு மாதங்கள் பிணைக்கைதிகளாக சிறை பிடித்து வைக்கப்பட்டிருந்த அவர்கள் நால்வரும் கடந்த ஜூன் 7-ம் தேதி விடுவிக்கப்பட்டனர்.

#TamilSchoolmychoice

இந்நிலையில் அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்கள் நால்வரும் தங்களுக்கு உதவி செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்ததோடு, தீவிரவாதிகளின் பிடியில் சிக்கியிருந்த போது அனுபவித்த துன்பங்களை அச்சத்துடன் விவரித்துள்ளனர்.

காட்டுக்குள் பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டிருந்த போது, கொசுக்கடி, தேள்கடி போன்ற துன்பங்களுக்கு மத்தியில், கனடா பிணைக்கைதி ஜான் ரிஸ்டெலின் தலையை வெட்டும் காணொளியையும் அவர்கள் நால்வருக்கும் காட்டியுள்ளனர்.

இதனால் அந்த நால்வரும் உயிர் பயத்தில் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கின்றனர்.

“விரைவில் நாங்கள் அனைவரும் சாகப் போகிறோம் என்று மட்டும் தான் எங்களுக்குத் தோன்றியது. அந்தக் குரூரமான காணொளிக் காட்சிகள் மீண்டும் மீண்டும் என் மனதில் வந்து போய்க் கொண்டிருந்தது” என்று வோங் தெக் காங் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

மேலும், பிணைத் தொகை கொடுக்கப்படவில்லை என்றால், தனது தலையை தான் முதலில் வெட்டுவோம் என தீவிரவாதிகள் கூறியதாகவும், அதில் இருந்து விடுதலைக்கு முதல் நாள் வரை தன்னால் நிம்மதியாக உறங்க முடியவில்லை என்றும் தெக் காங் தெரிவித்துள்ளார்.

எப்போதும் கடவுளைப் பிரார்த்தனை செய்து கொண்டே இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முதல் மூன்று நாட்கள் பட்டினி

கடத்தப்பட்டு சிறை வைக்கப்பட்ட முதல் மூன்று நாட்கள் சாப்பிட எதுவும் கொடுக்கப்படவில்லை என்று தெக் காங் தெரிவித்துள்ளார்.

வியட்நாம் நாட்டைச் சேர்ந்த பெண்ணை மணம் முடித்துள்ள அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

தங்களுக்கு நேர்ந்த துன்பங்கள் குறித்து அவர் மேலும் கூறுகையில்,

“அதன் பின்னர், கொஞ்சம் சோறும், மீனும் கொடுத்தனர். ஒருமுறை மரவள்ளிக் கிழங்கின் தளிர்களை சாப்பிடக் கொடுத்தனர். அதைச் சாப்பிட்டுப் பழக்கமில்லாததால் நாங்கள் சாப்பிடவில்லை”

“மழை நீரை தான் நாங்கள் குடிக்க வேண்டும். சரியாகக் குளிக்க முடியாது. மழை வரும் போது அதில் நனைந்து உடலை சுத்தம் செய்து கொள்ள வேண்டும்”

“எங்களைத் தேளும், கொசுக்களும் கடித்தன” என்றும் தெங் காங் தெரிவித்துள்ளார்.

மேலும், தீவிரவாதிகளில் ஒருவர் அடிக்கடி தங்களை முகத்தில் குத்தி, அறைந்து துன்புறுத்தியதாகவும் தெங் காங் குறிப்பிட்டுள்ளார்.

“ஒவ்வொரு முறை அடிக்கும் போது, நாங்கள் வீட்டுக்குப் போக வேண்டுமா என்று கேட்பார்கள்” என்று தெரிவித்துள்ள தெக் காங், அவர்கள் ஆங்கிலத்திலும், மலாய் மொழியிலும் பேசியதாகவும் தெரிவித்துள்ளார்.

தப்பித்துச் செல்ல முயற்சி செய்யவில்லையா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, தாங்கள் நால்வரும் காலில் சங்கிலியால் கட்டப்பட்டிருந்ததாகவும் தெக் பதிலளித்துள்ளார்.

“எங்களைக் கட்டாயப்படுத்தி கருப்பு நிற உடை அணிய வைத்தார்கள். காரணம் பிலிப்பைன்ஸ் இராணுவம் எப்போதும் அவர்களைத் துரத்திக் கொண்டே இருந்தது. அடிக்கடி குண்டு போட்டுக் கொண்டே இருந்தார்கள். எங்களுக்கு மேலே ஹெலிகாப்டர் பறந்தால் போதும், “ஓடுங்கள்” என்று கூறி காட்டுக்குள் ஓட வைப்பார்கள்” என்று தெக் தெரிவித்துள்ளார்.

“மாலுமியாக இருக்க வேண்டாம் என என் மனைவி கூறினார். அவரது பேச்சைக் கேட்கவில்லையே என அப்போது வருந்தினேன். இனி இந்தத் தொழில் எனக்கு வேண்டவே வேண்டாம்” என்றும் தெக் கூறியுள்ளார்.

விடுதலை  

 

 Sarawak hostages
(இடமிருந்து: லாவ், ஹங் சிங், தெக் சி, தெக் காங், நால்வரும் தங்களுக்கு உதவி செய்தவர்களுக்கு மண்டியிட்டு நன்றி தெரிவிக்கின்றனர்)
கடந்த ஜூன் 6-ம் தேதி திடீரென ஒரு திருப்புமுனை ஏற்பட்டதாக தெக் தெரிவித்துள்ளார்.
துப்பாக்கி ஏந்திய ஒருவன் தங்களிடம் வந்து இதற்கு மேல் கவலைப்படத் தேவையில்லை என்று கூறியதாக தெக் குறிப்பிட்டுள்ளார்.
“நாளை (ஜூன் 7) நாங்கள் அனைவரும் வீட்டிற்குச் செல்வதாக அவர் கூறினார். நாங்கள் அதிர்ச்சியடைந்தோம். பேச்சே வராமல் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டோம். நாங்கள் கேட்டதை எங்களால் நம்பவே முடியவில்லை” என்றும் தெக் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கடந்த ஜூன் 7-ம் தேதி விடுவிக்கப்பட்ட அவர்கள் நால்வரும், மீண்டும் சரவாக் வந்தடைந்தனர். பின்னர் கோத்தா கினபாலுவில் அவர்களிடம் காவல்துறை வாக்குமூலம் பெற்று, அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் நடத்த உத்தரவிட்டுள்ளது.
இன்னும், அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் இருக்கும் லாவுக்கு, தோல் தொடர்பான வியாதிக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
தகவல், படம்: நன்றி (The Star)